புதுச்சேரி:

புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி யாகி விட்டதால், அங்கு புதிய சபாநாயகராக  சிவக்கொழுந்து  தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

புதுச்சேரி சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் சிவக்கொழுந்தை ஆளும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து  இன்று காலை கூடிய சட்டமன்ற கூட்டத்தில் புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தற்காலிக சபாநாயகர் அனந்தராமன் அறிவித்தார்.

இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் – திமுக சட்டமன்ற உறுப்பி னர்கள் ஆகியோர் புதிய சபாநாயகர் வி.பி.சிவகொழுந்தை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

இதற்கிடையில், தனக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முதல்வரின் பாராளுமன்ற செயல ருமான லட்சுமி நாராயணன் தான் எதிர்பார்த்திருந்த பதவி சிவக்கொழுந்துக்கு சென்ற  அதிருப்தியில் சட்டமன்ற நடவடிக் கையை  புறக்கணித்து தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தார். முதல்வர் நாராயண சாமியுடனும் கடும்  வாக்குவாதம் செய்தார். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.

லட்சுமி நாராயணன் – அதிருப்தி காங்.எம்எல்ஏ

இந்த நிலையில், சபாநாயகர் தேர்வுக்கு அவகாசம் வழங்காமல் உடனே நடத்தப்படுவதாக கூறி என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் என ஒட்டுமொத்த எதிர்க்கட்சி யினரும் பேரவை கூட்டத்தை புறக்கணித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து சட்டப்பேரவை செயலிடம் கடிதம் கொடுத்தார்.