‘சிவன்மலை’ உத்தரவு பெட்டியில் பூ மாலை வைத்து வழிபாடு!

காங்கேயம்:

sivan malai

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், பூ மாலை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இதனால், திருமண கனவோடு காத்திருக்கும் காளையருக்கும், கன்னியருக்கும் விரைவில் திருமணம் கைக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை புகழ்பெற்ற மலைக்கோவில். சிவவாக்கிய சித்தரால் பாடல் பெற்ற தலம். இங்கு நடக்க இருப்பதை, முன் கூட்டியே உணர்த்தும் விதமாக, 100 ஆண்டுக்களுக்கும் மேலாக ஆண்டவர் உத்தரவு பெட்டிவைக்கப்பட்டுள்ளது.

சிவன்மலை ஆண்டவர், பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இந்த பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். உத்தரவு பெற்ற பக்தர், கோவில் நிர்வாகத்தை அணுகி, தமது கனவில் உத்தரவான பொருளை கூறுவார். கோவில் நிர்வாகத்தினர் பூ வைத்து, சுவாமியிடம் உத்தரவு கேட்பர்.  உண்மையெனில் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்.

கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு, கால நிர்ணயம் என்று எதுவும் இல்லை. இன்னொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடி பெட்டிக்குள், பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இங்கு வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கடந்த மே, 6ம் தேதி முதல், துளசி செடி வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்,  திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொங்கூரை சேர்ந்த சிவராம் என்பவரின் கனவில் பூமாலை உத்தரவானது. இதையடுத்து, ஆண்டவன் உத்தரவு பெட்டியில், (28/08/2016) முதல் பூமாலை வைத்து பூஜை செய்யப்படுகிறது.

திருமண கனவோடு காத்திருக்கும் காளையருக்கும், கன்னியருக்கும் விரைவில் திருமணம் கைக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

sivan+petti

இது குறித்து, கோவில் சிவாச்சாரியார் ராஜசேகர் கூறியதாவது: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது பூமாலை வைத்து செய்யப்படுகிறது. இதனால் சுபகாரியங்கள் கைகூடும். மேலும் போக போக தான் சமுதாயத்தில் இதன் தாக்கம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.