பீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா?  : சிவசேனா

மும்பை

பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் பீகார் மாநில மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி என அறிவித்ததை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் ஐ ஜ த மற்றும் பாஜக ஓர் அணியாகவும், காங்கிரஸ் மற்றும் ரா ஜ த மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளனர்.

நேற்ற் முன் தினம் பாஜக வழங்கிய தேர்தல் அறிக்கையில் பீகார் மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது மற்ற மாநிலங்களுக்குள் கடும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.  மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சி இந்த வாக்குறுதியைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் நேற்றைய தலையங்கத்தில், “பாஜக கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்கிறது.  தனது தேர்தல் அறிக்கையில் பீகார் மாநிலத்துக்கு மட்டும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அப்படியானால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாகிஸ்தானா? அனைத்து மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் சம உரிமை வழங்க வேண்டும்.  முன்பு பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டால் அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாகப் பகிர்ந்தளிப்போம் எனவும் மத மற்றும் ஜாதி அடிப்படையில் வழங்க மாட்டோம் எனவும் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் பாஜக இப்போது பீகார் தேர்தலுக்காக அவரது வாக்குறுதியை கை விட்டு விட்டது.  இப்போது பீகார் மாநிலத்துக்கு மட்டும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக அளிக்க உள்ளதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.  இவ்வாறு வாக்குறுதியை மீற பாஜகவை யார் அறிவுறுத்தி வருகின்றனர்” எனக் கேட்கப்பட்டுள்ளது.