பிரதமர் விழாவை புறக்கணித்த ஆறு அமுல் இயக்குனர்கள்

னந்த், குஜராத்

பிரதமர் மோடியின் விழாவை அமுல் நிறுவன இயக்குனர்கள் ஆறு பேர் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய பால்பொருட்கள் தயாரிக்கும் கூட்டுறவு நிறுவனம் அமுல் என அழைக்கப்படும் ஆனந்த் மாவட்ட பால் பொருட்கள் தயாரிப்போர் சங்கம் ஆகும்.  இந்த நிறுவனம் தற்போது பாஜக வை சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப் படுகிறது எனவும் மற்றவர்கள் ஓரம் கட்டப்படுகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனம் சார்பில் ஒரு சாக்கலேட் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப் பட்டுள்ளது.  அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார்.   இந்த விழாவில் அமுல் நிறுவன இயக்குனர்கள் ஆறு பேர் கலந்துக் கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழாவில் கலந்துக் கொள்ளாத ஆறு இயக்குனர்களில் ஒருவரான ராஜேந்திர சிங விழா நடப்பதற்கு முன் தினம், “நானும் மற்றும் ஐந்து இயக்குனர்களும் இந்த விழாவில் கலந்துக் கொள்ளப் போவதில்லை.   இது குறித்து நிறுவன தலைவரிடம் ஏற்கனவே சொல்லி விட்டோம். எங்களுக்கு இந்த விழாவில் பிரதமர் கலந்துக் கொள்வதைப் பற்றி எந்த ஒரு ஆட்சேபணையும் இல்லை.

ஆனால் இது ஒரு அரசியல் நிகழ்வாக ஆகி விடும் என்பதால் நாங்கள் இந்த விழாவில் கலந்துக் கொள்ளவில்லை.  விழாவில் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது மட்டுமே நடைபெறும்  எனும் போது நாங்கள் ஏன் கலந்துக் கொள்ள வேண்டும்?  அத்துடன் தற்போது அமுல் முழுக்க முழுக்க பாஜக மயமாக்கப்பட்டு வருகின்றது.” என தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர சிங் இது குறித்து செய்தியாளர்களிடம், “நான் கடந்த 12 வருடங்களாக இந்நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளேன்.  எனது தந்தையும் துணைத்தலைவராக பதவி வகித்தவர்.   இது வரை அமுல் நிறுவன விழாக்களுக்கு பல அமைச்சர்கள் வந்துள்ளனர்.  ஆனால் அரசியல் நிகழ்வு எதுவும் நடந்தது இல்லை.  அழைப்பிதழில் முழுக்க பாஜக தலைவர்கள் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது” எனக் கூறி உள்ளார்.

அமுல் நிறுவன 17 இயக்குனர்களில் ராஜெந்திர சிங் ஒருவர் ஆவார்.  இவர் போர்சாத் தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார்.   அரசியல் கூடாது என்பதற்காக ராஜேந்திர சிங் விலகி இருப்பதாக கூறி வரும் அதே வேளையில்  இந்த நிறுவன தலைவரான பாஜகவை சேர்ந்த ராம்சிங் பர்மார் கலந்துக் கொண்டு பிரதமருக்கு மாலை அணிவித்து வரவேற்றுள்ளார்.   இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது பாஜகவுக்கு மாறியவர் ஆவார்.