‘பாகுபலி 2’  தயாரிப்பாளர்களை மிரட்டிய 6 பேர் கைது

மும்பை: ‘பாகுபலி 2’ படத்தின் தயாரிப்பாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய  ஆறு பேர் கொண்ட கும்பலை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளது.

சமீபத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘பாகுபலி 2’.

இந்த நிலையில் இப் படத்தின் தயாரிப்பாளர்களிடம், ரூ.15 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் படத்தின் நகலை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டிய  6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில்  பீகாரைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் திவாகர் குமாரும் ஒருவர். மிரட்டியவர்களில் இன்னொருவரான ராகுல் மேத்தா என்பவர் புதுப்படங்களை சட்டவிரோதமாக வெளியிடும் இணையவழி சேவை நடத்தி வருகிறார்.

இவர்தான் பாகுபலி பட தயாரிப்பாளர்களிடம் பேசியிருக்கிறார்.  அவர்,  பாகுபலி 2 படத்தின் ஹை-டெபனைஷன் பதிப்பு இருப்பதாகவும், இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அவரிடம் இருக்கும் படத்தின் ஒரு காப்பியை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து டில்லி காவல்துறை ஆணையரிடம் தயாரிப்பாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  ஹைதராபாத்தின் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் கடந்த மே 11ஆம் தேதி ராகுல் மேத்தா கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணையின் போது, தமது கூட்டாளிகளான ஜிதேந்தர் மேத்தா,  முகமது அலி  ஆகியோரும் குறித்து தெரிவித்தார். பிறகு அவர்களும் கைது செய்யப்பட்டனர்.