டில்லி:

தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு எதிராக புதிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பாரதியஜனதா கட்சிக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் புதிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒன்றை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து தேர்தலுக்கு முன்பே புதிய அஜன்டா உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

நேற்று டில்லியில் ஆம்ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்பட ஏராளமான எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுக, இடதுசாரிகள் உள்பட 22 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர்

அதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் வீட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆலோசனையை தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாகவும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி அமைவது உறுதி எனத் தெரிவித்தார். தேர்தலுக்குப் பிறகு கருத்து வேறுபாடுகள் எழாத வகையில் குறைந்த பட்ச செயல்திட்டம் வகுக்கப்படும் என்றும் மம்தா தெரிவித்தார்.

செய்தியாளரகளிடம் பேசிய ராகுல்காந்தி, எதிர்க்கட்சிகள் சார்பில், பொதுசெயல் திட்டம் அமைப்ப தற்கான பேச்சுவார்த்தைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இந்த கூட்டணி அமைவது காலத்தின் கட்டாயம் என சந்திரபாபு நாயுடு, பரூக் அப்துல்லா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த ஆலோசனைக்கு பிறகு, கூட்டணி குறித்தும், பொதுச்செயல் திட்டம் குறித்தும் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுக்கும் வகையில் தேர்தலுக்கு முன்பே கூட்டணி குறித்து அறிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே இதுபோன்ற கூட்டணி உருவாக்கப்பட்டு பொது செயல் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு விட்டால், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இழுபறியாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளின் வெற்றியை கணக்கிட்டு ஆட்சி அமைக்க ஜனாதிபதி  அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இ

தன் காரணமாக பாராளுமன்ற தேர்தலில் ஒருவேளை பாஜக வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், பாஜக அரியணை ஏறுவதை தடுக்கும் வகையில் இந்த புதிய கூட்டடணி உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.