சென்னை:

சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்பு நிலையை திரும்பக் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த திங்கள் முதல், உள்நாட்டு விமானப்போக்குவரத்து இயங்கி வருகிறது.

இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து இண்டிகோ விமானத்தில் 51 பயணிகள் சேலத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமையன்று சென்னையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில், பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பயணிகளும், விமான பணியாளர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றுபுதிதாக மேலும் 827 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 19 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 827 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது எனவும், இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 19 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் நேற்று 639 பேர் நலம் அடைந்ததால், மொத்தம் நலமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளதாகவும், நேற்று 12 பேர் உயிரிழந்தனர் என்றும், இதனால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இறப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 7 சதவீதமாக உள்ளதாகவும், குணம் அடைந்தவர்கள் 55 சதவீதமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் அதாவது 4 லட்சத்து 55 ஆயிரத்து 216 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.