தேசிய அளவில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை ஏற்றமும், இறக்கமுமாகவே இருந்து வருகிறது. தேசிய அளவில் வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில், கடும் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காய வரத்து குறைந்து, விலை உயர்வுக்கு அதுவே காரணமாகி இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தின் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூபாய் 140 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ ரூ. 80க்கு விற்பனையாகிறது. திருச்சி வெங்காய மண்டியில் சின்ன வெங்காயம கிலோ ரூ. 140க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ. 110க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம் பகுதிகளில் வெங்காய விளைச்சல் சிறப்பாக இருப்பதன் காரணமாக, கோவை மாவட்டத்தில் மட்டும் வெங்காய விலை குறைவாக காணப்படுகிறது. கோவையில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் கிலோ ரூ. 70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை காய்கறி சந்தையில் வெங்காய வரத்து குறைந்துள்ளதன் காரணமாக, சின்ன வெங்காயம் ரூ. 140க்கும், பெரிய வெங்காயம் ரூ. 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தை போல பிற மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருப்பதால், அதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 1.20 லட்சம் டன் வெங்காயத்தை இதற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு, அது தொடர்பான அமைச்சரவை ஒப்புதலும் கடந்த வாரம் வழங்கப்பட்டது. அதன்படி, 6,090 டன் வெங்காயத்தை எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்து, உள்ளூர் சந்தையில் ரூ. 60க்குள் விற்பனை செய்ய பொதுத்துறை வர்த்தக நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

டிசம்பர் முதல் வாரம் முதல் இறக்குமதியாகும் இந்த வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.