கீழடியில் 6வது கட்ட அகழ்வராய்ச்சி: ஓரிரு நாளில் தொடக்கம்..!

--

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கனவே 5வது கட்ட அகழ்வராய்ச்சி நடைபெற்றுள்ள நிலையில், தற்போது 6வது கட்ட அகழ்வராய்ச்சி பணி தொடங்க உள்ளது. ஜனவரி 2வது வாரத்தில் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கீழடியில் இதுவரை நடைபெற்றுள்ள  அகழாய்வில் தமிழர்களின் பெருமை மற்றும் தொன்மையை பறைசாற்றும் பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய நான்கு இடங்களில் 6வது கட்ட அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி இன்னும் ஓரிரு நாளில் அகழ்வாய்வு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிவகங்கையில் உள்ள கீழடியில் 5-கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான தொன்மைப் பொருட்கள், வரலாற்றுப் பதிவுகள், பண்டைகால நாகரிகம் உள்ளிட்டவை குறித்து கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான பொருட்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டன. சங்கு வளையல், பானை ஓடு, வில் அம்பு உருவம் பதித்த பானை ஓடு, சூது பவளம், கழுத்து பதக்கம், 2 இஞ்ச் பானை உள்ளிட்ட 900 பொருட்கள் கண்டறியப்பட்டன.

கடந்த 2015-ம் ஆண்டு 3 கட்டமாக அகழாய்வு பணியில்  பூமிக்கடியில் புதையுண்டு இருந்த 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 7,818 பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது. 4-வது கட்ட அகழாய்வில் 5,820 தொல் பொருட்கள் கிடைத்தன.

5-வது கட்ட அகழாய்வு பணி கடந்த ஆண்டு (2019) நடைபெற்றது. இந்த ஆய்வின் மூலம் தமிழர் நாகரீகத்தின் பழமை குறித்து வியத்தகு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.  இரட்டை மற்றும் வட்டச்சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள், மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், செப்பு, வெள்ளி காசுகள், விசித்திர குறியீடுகள் போன்றவை கிடைத்தன.

இதை ஆய்வு செய்த அகழ்வராச்சியாளர்கள், இவைகள் அனைத்தும்  2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், அப்போதே தமிழர்கள் இன்றைய கால நவீன முறைகளை கடைபிடித்து உள்ளது தெரிய வந்தது.

அதைடுத்து கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 6வது கட்ட அகழாய்வுப் பணிகளை தொடர மத்திய அரசு அனுமதி அளிக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து,  கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட பகுதிகள் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, பணிகள் இன்னும் சில நாட்கள் தொடங்க உள்ளது.

அத்துடன் அகழ்வாய்யு செய்யப்பட வேண்டிய இடங்கள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் ஆளில்லா வான்வழி வாகனங்களை (யுஏவி) பயன்படுத்தி வான்வழி கணக்கெடுப்பு குரோமேபெட்டின் மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.

அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டிய இடங்களை வரைபட வல்லுநர்கள் தளங்களைப் பார்வையிட்டனர் மற்றும் பயிற்சிக்கான சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்த அகழ்வாராய்ச்சி பருவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விரிவான செயல்முறையின் ஒரு பகுதியாக, டி.என்.ஏ.டி பல்வேறு கல்வி நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அத்தகைய ஒரு தொடர்பு மதுரை காமராஜ் பல்கலைக்கழக உயிரியல் அறிவியல் பள்ளியுடன் உள்ளது, இது ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.

அதுபோல  கலைப்பொருட்களின் உலோகவியல் ஆய்வுகள், மகரந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி மற்றும் மிருக எலும்பு பகுப்பாய்வுக்காக புனேவின் டெக்கான் கல்லூரி  ஆகியவற்றுடன் பெங்களூரு தேசிய மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்துடன்  இணைந்துள்ளது. இதன் மூலம் அகழ்வாய்வின்போது கிடைக்கும் பொருட்களின் தரம் மற்றும் வருடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.