சென்னை:

நேற்றைய ஆட்டத்தின்போது, சிஎஸ்கே வீரர் வாட்சனின் மிரட்டலான அதிரடியால் சிஎஸ்கே அணி சன் ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம்  சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்  இடையே நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது.

ஆட்டத்தின்போது, டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து,  ஐதராபாத் அணி மட்டையுடன் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர்.

ஐதராபாத் வீரர்கள் தங்களது அதிரடியை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்த்த நிலையில்,  அணியின் ரன்  5 ஆக இருக்கும்போது பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து  மணீஷ் பாண்டே களமிறங்கினார். இவரும் வார்னதும் இணைந்து பொறுப்புடன் நிதானமாகவும், அதே வேளையில் அதிரடியாகவும் ஆடி வந்தனர். இருவருமே அரை சதத்தை நிறைவு செய்து அணியின் ஸ்கோர் 120 ரன் வந்த நேரத்தில்,  வார்னர் வெளியேறினார். அவர்  57 ரன் எடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து, தமிழக வீரர்  விஜய் சங்கர் களத்திற்குள் வந்தார். அவரும்   மணீஷ் பாண்டே அதிரடியாக ஆட்டத்தை தொடர்ந்தனர். அணியின் எண்ணிக்கை 167 ஆக இருக்கும்போது விஜய் சங்கர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது. மணீஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 83 ரன்களை எடுத்திருந்தார்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு சிஎஸ்கேவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக  டு பிளிசிஸ்,  வாட்சன் களமிறங்கினர்.  1 ரன் னில் டு பிளிசிஸ் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதையடுத்து  வாட்சனுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தனது அதிரடி சாகசத்தை நிகழ்த்தியது.   ரெய்னா 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த போது ரஷித் கான் பந்து வீச்சில் ஸ்டெபிங் என்ற முறையில் வெளியேறினார்.  இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியது. இருந்தால் வாட்சன் தனது அதிரடி மிரட்டலான ஆட்டம் காரணமாக சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்து கரகோஷம் எழுப்பி வந்தனர். வாட்சனுடன் ராயுடு கைகோர்த்த நிலையில்,  வாட்சன்,  52 பந்துகளில் 6 சிக்சர்களும் 9 பவுண்டரிகளும்  அடித்து 96 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து கடைசி ஒரு ஓவரில்  9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ராயுடு 1 ரன்னும் 2 பந்தில் கேதர் ஜாதவ் சிக்சும் அடித்தார். ராயுடு 21 ரன்னில் வெளியேறினார். இந்நிலையில் 1 பந்து மீதம் உள்ள போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார், ரஷித் கான், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதுவரை நடைபெற்ற 11 போட்டிகளில் சென்னை அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன்மூலம் 16 புள்ளிகளை பெற்றிருக்கிறது சென்னை அணி. மேலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தேர்ச்சி பெற்ற முதல் அணி என்ற சிறப்பை சென்னை அணி இதன்மூலம் பெற்றுள்ளது.

கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்த சென்னை அணியின் நேற்றைய வெற்றி அதன் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. பல நாட்களுக்கு பிறகு ஷேன் வாட்சன் தனது பேட்டிங்கில் ஒரு மேஜிக் நிகழ்த்தினார் .அவரது ஆட்டம் மிரட்டலாகவே இருந்தது. சன் ரைசர்ஸ் புலவர்களின் பந்தை அடித்து துவம்சம் செய்தார்.

ஆட்ட நாயகனாக ஷேன் வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.