அத்தியாயம் 3: பொடுகே போ:

டாக்டர் த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி., டி.டி.

லை அரிப்புக்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு.  ஒன்று பொடுகு, மற்றொன்று பேன்.

pityrosporum  என்ற ஒரு கிருமி தோலை அரிப்புறச்செய்து தோலை பொடுகாக கொட்ட வைக்கிறது.  பொடுகு உள்ளவர்களுக்கு தலையின் எல்லா பகுதிகளிலும் தோல் உதிர்தல் இருக்கும்.  பொடுகு மிக அதிகமாக உள்ள போது அது முகத்தில் கண் புருவத்திலும், நாசியின் வெளிப்புறம் மற்றும் காதின் பின்புறம்கூட வரலாம்.  சில சமயம் மார்பிலும், முதுகிலும் வரலாம்.  இவ்வாறு வந்தால் அதை சிபோரிக் டெர்மடைடிஸ் (seborrhoeic dermatitis)  என்பர்.

மருத்துவர் த. பாரி

பொடுகு 10 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கே அதிகமாக வரும்.  ஏனென்றால் அவர்களுக்கு எண்ணெய் சுரப்பி அதிகமாகச் சுரக்கும்.  அதே சமயத்தில் சில குழந்தைகளையும் பொடுகு பாதிப்பது உண்டு.   இதை தொட்டில் தொப்பி (cradle cap) எனலாம்.

பொடுகு முகத்தில் விழுந்தால் பரு வந்துவிடுமோ என்ற அச்சம் இளம் பருவத்தினரிடையே இருக்கிறது.   பொடுகும் பருவும்  ஒரே நேரத்தில் வரலாம். ஆனால் பொடுகால் பரு வருவதில்லை. (இரண்டும் வேறு வேறு டிபார்ட்மெண்ட்!)

பொதுவாக பொடுகு செதில்கள் மிருதுவாக இருக்கும்.  ஒருவேளை இந்த செதில்கள் தடிமனதாக இருந்தால், கூடுதல் எச்சரிக்கை தேவை. ஏனெனனில் இப்படி செதில்கள் தடிமனாக இருந்தால் அது சொரியாஸிஸ் ஆக இருக்கலாம்.

பொடுகு குறைவாக இருந்தால், இதற்கென இருக்கும் பிரத்யேக ஷாம்புக்களை  உபயோகப்படுத்தலாம்.  பொடுகு ஷாம்பு மூலம் முடிஉதிர்ந்துவிடுமோ என்ற பயம் வேண்டாம்.  ஷாம்பு போடும்போது கிருமிகள் குறைந்து பொடுகு மறையும். ஷாம்பு போடுவதை  நிறுத்திவிட்டால் – எண்ணெய் சுரப்பி அதிகம் உள்ள தலையில் –  மீ்ண்டும் பொடுகு ஏற்படும்.  ஆகவே பொடுகை கட்டுப்படுத்த முடியுமே தவிர, நிரந்தரமாக ஒழிப்பது முடியாது.

பொடுகு அதிகமாக இருந்தால் மேலே தடவிக்கொள்ளும்படியாக ஒரு சில மருந்துகள் தேவைப்படலாம்.

பொதுவாக பொடுகு குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும்.  வயது ஆக ஆக குறையும்.

பலருக்கும் இருக்கும் தவறான நம்பிக்கை, ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு பொடுகு பரவும் என்பது. அதாவது பொடுகை ஒரு தொற்று நோய் ரேஞ்சுக்கு கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள்.

அது உண்மை அல்ல.  பொடுகு  ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு  பரவுவதில்லை. அவரவர் உடல் அமைப்பு, எதிர்ப்பு சக்தி போன்றவைக்கு ஏற்பவே பொடுகு பாதிக்கிறது.