என்னுயிர் “தோலா”-6: முடிச்சாயம்.. நல்லதா கெட்டதா? டாக்டர். த.பாரி

பகுதி: 6:  முடிச்சாயம்.. நல்லதா கெட்டதா?
டாக்டர். த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி, டி.டி.,

ழுபதைக் கடந்த  பிரபலங்கள் பலரும், கருகருவென்ற தலைமுடியோடு உலாவருதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட வி.ஐ.பிக்களில் இருந்து நமது அக்கம் பக்கத்து வீட்டில் இருக்கும் எளிய மனிதர்கள் வரை.. பலரையும் இளமைத் தோற்றத்தில் வைத்திருப்பது…  முடிச்சாயம். அதாவது ஹேர் டை. (Hair dye).

வயதானவர்களுக்கு மட்டுமல்ல.. நரை பிரச்சினை இளைஞர்களுக்கும் இருக்கிறது.  இதைத் தீர்க்கும் வரப்பிரசாதமாக இருப்பது முடிச்சாயம்தான்.

இது இரண்டு வகைப்படும்.

ஒன்று இயற்கைச் சாயம், மற்றது செயற்கைச் சாயம்.

இயற்கைச் சாயம் என்பது மருதாணி மற்றும் இண்டிகோ தாவரங்களில் இருந்து கிடைப்பது. இதை தலைமுடிக்கு பயன்படுத்தும்போது தற்காலிகமாகவே இருக்கும். அதாவது தலைக்கு குளித்தால் சாயம் கலைந்துவிடும்.

மற்றது  செயற்கை சாயம்.  இது முடியை உறுதியாகப் பற்றிக்கொள்ளும். இதில் பாரபீன்லின் டையமின் – பிபிடி (paraphenylenediamine)  என்ற வேதிப்பொருள் உள்ளது.  இது நிறமற்றதாகும்.  இதனுடன் அமோனியா அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்கும்போது கருமை நிறம் உருவாகிறது.  இதை முடியில் இடும்போது முடியோடு நன்கு சேர்ந்துவிடும்.

ஆனாலும் இதை மாதம் ஒருமுறை தடவ வேண்டிவரும்.  ஏனென்றால் பொதுவாக நமது தலைமுடி, மாதம் 1 செ. மீ. வளரும். ஆகவே புதிதாக முளைக்கும் முடியின் இயல்பான வெள்ளை நிறம் வெளியில் தெரியும்.

ஒவ்வாமை ( அலர்ஜி)

சிலருக்கு  முடிச்சாயம் இட்டவுடன் அரிப்பு, நீர் வடிதல், முகவீக்கம் போன்றவை உண்டாகலாம். வேறு சிலருக்கு, ஆரம்பத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் தொடர்ந்து நீண்ட நாட்கள் இந்த (செயற்கை) சாயத்தை பயன்படுத்தும்போது அலர்ஜி ஏற்படலாம்.

இது நீண்ட நாட்கள் உபயோகிப்பவருக்கும் வரலாம்.  இதற்கு முக்கிய காரணம் பிபிடி ஆகும்.  ஒரு சிலருக்கு அமோனியாவால் வரலாம்.

சில செயற்கை முடி சாய டப்பாக்களில் “அமோனியா ப்ரீ” என்ற வார்த்தை பதிக்கப்பட்டிருக்கும். முடிச்சாயத்தால் அலர்ஜி ஏற்பட்டவர்கள் இதை ஆர்வத்துடன் வாங்குவார்கள்.

அவர்களுக்கு முக்கியமான ஆலோசனை….

நீங்கள் வாங்கும் முடிச்சாயத்தில் “அமோனியா ப்ரீ” என்று மட்டும் இருந்தால் போதாது…  “பிபிடி ப்ரீ, அமோனியா ப்ரீ என்று குறிப்பிட்டு இருந்தால் மட்டுமே ஒவ்வாமை (அலர்ஜி) வராமல் இருக்க சாத்தியம் உள்ளது.

இதைவிட கெடுதல் ப்ளாக் ஹென்னா. அதாவது  பிபிடி  உள்ள  மருதானிதான் ப்ளாக் ஹென்னா.  எனவே ஒவ்வாமை உள்ளவர்கள் ப்ளேக் ஹென்னா பயன்படுத்தாதீர்கள்.

பிபிடியால் வெண்புள்ளி வியாதியும் வர வாய்ப்பு உண்டு என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஆகவே செயற்கை சாயத்தால் ஒவ்வாமை தொல்லை ஏற்படுபவர்கள்,  இயற்கை முடிச்சாயம் இடலாம்.  ஆனால் இது நான்கைந்து முறை ஷாம்பு  போட்டு குளித்தால் மறைந்துவிடும்.

இப்போது சில வாசகர்களுக்கு, “முடி இருந்தால்தானே முடிச்சாயம் போடமுடியும்.. முடியே இல்லாமல் வழுக்கையால் அவதிப்படுகிறோமே” என்று தோன்றும்.

அடுத்த வாரம் வழுக்கை பற்றி பார்ப்போம்..

(தொடரும்..)

கார்ட்டூன் கேலரி