என்னுயிர் “தோலா”- 10 : கை, கால், வாய் நோய்.. இது தானாகவே சரியாகும்!

அத்தியாயம் 10: டாக்டர் த.பாரி எம்.பி.பி.எஸ்., எம்.டி., டி.டி.,

மது உடலில் ஏற்படக்கூடிய வெளிப்புற நோய்களான கை, கால், வாய், வியாதி [Hand, foot, and mouth disease] பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், தோல் மருத்துவர் த.பாரி.

கை, கால், வாய் நோயானது.. மழைக்காலம், மற்றும் குளிர் காலத்தில் பரவலாகக் காணப்படும்.

இது வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இது, இருமல், தொடுதல் மற்றும் மலம் மூலமாக  பரவும்.

இந்த  நோய், ஜுரத்துடன் சிறு குழந்தைகளுக்கு ஆரம்பிக்கும், அடுத்து ஒரு சில நாட்களில் வாயில் கொப்புளம் உண்டாகி புண் ஆகும். அதனால் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள். அதிகமாக “ஜொல்’’ வடியும்.

அதே போல  உள்ளங்கை, கைமூட்டு, பாதம், கால் மூட்டு மற்றும் ஆசனப் பகுதியில் சிவந்த கொப்புளம் உண்டாகும்.

அதனால் அரிப்பும் வலியும் ஏற்படும்.  குழந்தையால் நிற்கவும் முடியாது, முட்டிப்போட்டு நகரவும் முடியாத நிலை உண்டாகும். இது 7-10 நாட்களில் தானகவே சரியாகும்.

இந் நோய் பாதித்த ஒரு சில மாதங்கள் கழித்து சில குழந்தைகளுக்கு நகத்தில் பள்ளம் உண்டாகலாம்.

இந்த நோய்க்கு சிகிச்சை எதுவும் தேவையில்லை. அதே நேரம் அரிப்பு குறையவும், ஜுரம் குறையவும் மருந்துகள் தேவைப் படலாம்.

இந்த நோய், தொற்றும் தன்மை கொண்டது மற்றவர்களிடம் இருந்து பரவும் தன்மை உடையது.

நோய் பாதிப்பு இருக்கும் சமயத்தில் மற்ற குழந்தைகளுக்கும் பரவும் என்பதால் நோய் பாதிப்புள்ள குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம், குணமானதும் அனுப்பலாம்.

பெரியவர்களுக்கு அபூவர்வமாக வரலாம். குளிகாலத்தில் மற்றும் மழைகாலத்தில் கை, கால், வாய் சுத்தமாக வைத்துக் கொள்வதே இந்த நோயிலிருந்து மட்டுமல்ல.. பொதுவாக நோய் அண்டாமல் வாழ உதவும்.

கார்ட்டூன் கேலரி