லூதியானா

தீவிரவாதிகளுடன் நடைபெறும் போரில் பல வீரர்கள் கொல்லப்பட்டும் இந்த அரசு தீவிரவாதத்தை முழுமையாக ஒடுக்காமல் உள்ளதாக வீரர்களின் குடும்பத்தினர் கூறி உள்ளனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெறும் சண்டையில் வீரர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாகி வருகிறது.   இது குறித்து லூதியானாவில் இருந்து சென்று கொல்லப்பட்ட வீரர்களின் உறவினர்கள் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் பர்கர் சிங் என்னும் வீரர் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார் அவரது உடல் ராஜோரி செக்டரில் உள்ள அவருடைய இல்லத்தில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டது.    அப்போது அவருடைய தந்தையார் ரத்தன் சிங், “நமது அரசு தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.   ஆனால் அரசு ஏன் இந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை?   நமது இழப்புக்காக அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அப்போது இதே போல கொல்லப்பட்ட பல வீரர்களின் உறவினர்கள் அங்கு கூடி இறுதி மரியாதை செலுத்தினர்.     அவர்களில் பலரும் இதே கருத்தை தெரிவித்தனர்.   சமீபத்தில் மரணம் அடைந்த மற்றொரு வீரரான குல்தீப் சிங்கின் உறவினர் சத்னம் சிங், “எனது உறவினர் மரணம் அடைந்து விட்டார்.    அவருடைய ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.    ஆனால் எங்கள் மனம் சாந்தி அடையவில்லை.     இன்னும் எத்தனை காலம் தான் இது போல இந்த நாடு தீவிரவாதிகளுக்கு நம் வீரர்களை பலியிடப் போகிறது?   இந்தியா – பாக் ஆகிய இரு அரசுகளும் சேர்ந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.   தீவிரவாத இயக்கங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்”  என தெரிவித்தார்.

மறைந்த மற்றொரு வீரரான கர்னெயில் சிங்கின் உறவினர், “ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு வீரர் கொல்லப்படும் செய்திகள் தற்போது வாடிக்கையாகி உள்ளது.    இது லூதியானாவில் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெறுகிறது.    மோடி அரசின் தவறான கொள்கையால் நாங்கள் எங்கள் குடும்பத்தினரை இழந்து வருகிறோம்.    உடனடியாக இந்த அரசு தீவிரவாதத்தை அடியோடு ஒழித்தக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதன் பின் பர்கர் சிங் உடல் ராணுவ மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.