சூர்யா பற்றி அவதூறு: சன் டிவி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை :

சூர்யா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த சன் டிவி தொகுப்பாளினிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள  சன் டிவி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சன் டிவியின்,  சன் மியூசிக் சேனல் நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்ததாக புகார் தெரிவித்து தொகுப்பாளினிகள் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சங்க தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இன்று  சன் டிவி அலுவலகத்தை சூர்யாவின் ரசிகர்கள் நூற்றுக் கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சன் மியூசிக்கின் ‘ஃப்ராங்கா சொல்லட்டா’ என்ற நிகழ்ச்சியில் பேசிய தொகுப்பாளினிகள், நிவேதிதா, சங்கீதா  கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவும், அமிதாப்பச்சனும் இணைந்து நடிக்கும் படம் தொடர்பான விவரங்கள் குறித்து,  சிங்கம் படத்தில் நடிகர் சூர்யா, அனுஷ்காவுடன் ஹீல்ஸ் போட்டு நடித்ததாகவும், இந்நிலையில் அமிதாபச்சனுடன் நடித்தால் நாற்காலி போட்டுத்தான் நடிக்க வேண்டும் என்றும்  கிண்டலடித்து பேசினார்கள்.

இதற்கு திரையுலகை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பாக  சன் மியூசிக் நிர்வாகிகளும், தொகுப்பாளர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூர்யாவை தரம்தாழ்ந்து விமர்சித்ததைக் கண்டித்து போஸ்டர்களையும், பேனர்களையும் கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர் சூர்யா ரசிகர்கள்.

இதற்கிடையில்,   நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பதிவில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி தரத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டாம் என்றும், நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுமாறும் தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.

https://patrikai.com/vishal-condemned-to-who-criticized-of-surya/

கார்ட்டூன் கேலரி