மும்பை: களத்தில் சச்சின் டெண்டுல்கரை வம்பிழுப்பது தேவையற்ற வேலை. அவர் ஒரு கிரிக்கெட் கடவுள் மற்றும் மன்னர் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் பிரெட்லீ.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கும், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட்லீக்கும் இடையிலான மைதானப் போட்டி சுவாரஸ்யம் மிகுந்தது. சச்சினின் டைமிங் ஒருபுறமென்றால், பிரெட்லீ காட்டும் ஆவேசம் இன்னொருபுறம்.

அவர்களுக்கிடையிலான போட்டியானது எப்போதும் மரியாதையுடனேயே பேணப்பட்டுள்ளது. அது இன்றுவரை தொடரவும் செய்கிறது. பிரெட் லீ இந்தியாவிற்கு அடிக்கடி வந்து செல்பவர். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, “சச்சின் டெண்டுல்கரை மைதானத்தில் சீண்டுவதானது, ஒரு பந்துவீச்சாளர் செய்யக்கூடாத வேலை.

அது அவரை இன்னும் அபாயகரமானவராய் மாற்றிவிடும். கிரிக்கெட்டில் பல சாதனையாளர்கள் இருந்தாலும், சச்சின் டெண்டுல்கர் மிகவும் விசேஷமானவர். அவரைப் போன்றவர்களை சீண்டக்கூடாது. அவர் கடவுள் போன்றவர்” என்றெல்லாம் புகழாரம் சூட்டினார்.

சச்சின் டெண்டுல்கருடைய 25 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில், அவரை உலகிலேயே அதிகமுறை அவுட்டாக்கிய பந்துவீச்சாளர் பிரெட்லீ என்பது குறிப்பிடத்தக்கது.