டில்லி:

திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் அருகே.  உள்ள அறைகளில், பிரபல பொருளாதார குற்றவாளிகள், காஷ்மீர் பிரவினைவாதத் தலைவர் யாஷின் மாலிக் ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் சிதம்பரம் தூக்கம் வராமல் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக  அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார் உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சிதம்பரத்தின் வேண்டுகோளை ஏற்று, அவரை திகார் ஜெயிலில்  பாதுகாப்புடன் கூடிய தனி அறை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று இரவு சிதம்பரம் பிரபலமான டில்லி  திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

மிகப்பெரிய ஜெயிலான, திகார் ஜெயிலில் உள்ள 7வது எண்ணைக் கொண்ட ஜெயில் பகுதியில் சுமார்  600 முதல் 700 கைதிகள் உள்ளனர்.  இவர்களில் பெரும்பாலானோர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். அதேபோல், பொருளாதாரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களும் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த 7வது எண் ஜெயிலின்  வார்டு எண்-2ல் உள்ள செல் எண்-15ல் சிதம்பரம் அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு அருகே பிரபல கிரிமினல்களும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள செல்லின் இருபுறங்களிலும்,  பிரபல காஷ்மீர் பிரிவினை வாதத் தலைவர் யாஷின் மாலிக் மற்றும், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மைக்கேல் மற்றும் வர்த்தக இடைத்தரகர் தீபக் தல்வாரும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அதுபோல  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையால்  விசாரிக்கப்பட்டு வரும் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரியும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் தற்போது சிதம்பரத்துக்கு தோஸ்துகளாக உள்ளனர். இவர்களிடம் பேசி பேசித்தான் தனது 15 நாள் சிறை வாழ்க்கையை சிதம்பரம் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

அத்துடன்  சிதம்பரம், மற்ற கைதிகளையும் போல சிறை நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள லாம். குறிப்பிட்ட நேரத்துக்கு தொலைக்காட்சி பார்க்கவும்  அனுமதிக்கப்படுவார்  சிறை விதிப்படி கைதிகள் தரையில்தான் தூங்க வேண்டும். ஆனால், ப.சி. சீனியர் சிட்டிசன் என்பதால், அவருக்கு  மரக்கட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் தனிக்கழிப்பறை வசதியும் உள்ளது.

ஏற்கனவே , இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட போதும், திகார் சிறையில் இதே 15வது  செல்லில்தான் அடைக்கப்பட்டு இருந்தாகவும் கூறப்படுகிறது.

சிறையில்  நேற்று இரவு உணவாக, சிதம்பரத்துக்கு,  5 சப்பாத்தி, பருப்பு கூட்டு, கொஞ்சம் சாதம் வழங்கப்பட்டது. ஆனால், சிதம்பரம் சிறிதளவே  சாப்பிட்டதாகவும், இரவு நெடுநேரம் வரை சிதம்பரம் தூக்கம் வராமல்  கஷ்டப்பட்டதாகவும்  சிறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி அவருக்கு கண்ணாடி, மருந்து மாத்திரைகள் மற்றும்  வெஸ்டர்ன் கழிப்பறை வழங்கப்படும் என்றும், மற்ற கைதிகளைப் போலவே சிதம்பரமும் நடத்தப்படுவார் என்றும் . திகார் சிறைச்சாலைகளின் கண்கணிப்ப்பாளர் சந்தீப் கோயல் கூறி உள்ளார்.

மேலும், சிதம்பரம் தினசரி தனது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசவும் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.