டிகர் ரஜினிகாந்த் மெல்ல மெல்ல உச்சத்துக்கு வந்துகொண்டிருந்த நேரம்.    தொடர்ந்து படப்பிடிப்பு.  தூங்கக்கூட நேரமில்லாமல்  ஷிப்ட் போட்டு நடித்துக்கொண்டிருந்தார்.  இயல்பில் எதார்த்த மனிதரான அவரால், இத்தனை வேலை மற்றும் அது கொடுத்த மன அழுத்தத்தை தாங்க முடியவில்லை. அவ்வப்போது டென்ஷன் ஆகிவிடுவார்.

மதுரை ஏர்போர்ட்டில் ஒரு சோடாகடைக்காரனை பெல்ட்டை கழட்டி அடித்துவிட்டார் என்றும்,  “புவனா ஒரு கேள்விக்குறி” படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது,  உதவி இயக்குநர் வெள்ளை முடி லோக நாதனுடன் கைகலப்பு ஏற்பட்டது எனவும் ,    ’’ நினைத்தாலே இனிக்கும்’’ பட டப்பிங் நடந்தபோது அந்த பட அசிஸ்டண்ட்டைரக்டர் கண்மணி சுப்பு( கண்ண தாசன் மகன்) அழைத்தும் வராமல்  இயக்குநர் கே.பாலச்சந்தர் போட்டோவை உடைத்துவிட்டார் எனவும் செய்திகள் வந்தபடியே இருந்த நேரம்.

இந்த காலகட்டம் குறித்து பின்னாட்களில், “அது ஒரு டென்ஷன் காலம்” என்று  ரஜினியும் சொல்லியிருக்கிறார். அந்த சமயத்தில்   “மூக்குத்தி” என்ற பத்திரிக்கையில், ரஜினியை “மெண்டல்” என்று குறிப்பிட்டு அவ்வப்போது எழுதிவந்தனர்.

ஒரு படப்பிடிப்பின்போது, அந்த “மூக்குத்தி” இதழில் பணிபுரிந்த  ஜெயமணி என்பவர் எதிர்ப்பட அவரிடம் “ஏன் என்னைப்பற்றி மோசமாக எழுதுகிறாய்” என்று கேட்டு ரஜினி ஆத்திரப்பட… வாக்குவாதம் முற்றிவிட்டது. ஒரு கட்டத்தில் ரஜினியை தனது செருப்பால் அடித்துவிட்டார் ஜெயமணி என்று செய்தி பரவியது.      ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார் ரஜினி. (ரஜினி தன் மேல் காரை ஏற்றி கொல்ல முயன்றார் என்றார் ஜெயமணி.)

இதற்கு நேர்மாறாக, ரஜினியால் செருப்பு வீச்சுக்கு உள்ளானவரும் ஒருவர் உண்டு. அவர் ரம்யா கிருஷ்ணன். இது பற்றி அவரே, ரஜினி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார்.

 

“படையப்பா படத்தின் மிக முக்கியமான காட்சி அந்த ஊஞ்சல் காட்சி தான், நான் அந்த காட்சி நடிக்கும் போது மிகவும் பயந்து விட்டேன், ஏனென்றால் அது ரஜினியை அவமானப்படுத்துவது போன்ற காட்சி. அவரது ரசிகர்கள் என்னை எப்படி நினைப்பார்களோ என்று தயங்கினேன். ஆகவே  ஆனால் ரஜினி, இயக்குர் எல்லோருமே “இது சினிமா தானே” என்று வற்புறுத்தி நடிக்க வைத்தார்கள்.

அந்த காட்சி தியேட்டரில் ஓடும்போது,  ரசிகர் ஒருவர் என் மீது ஆத்திரப்பட்டு  திரையை நோக்கி செருப்பை தூக்கி எறிந்தார். அது திரையில் இருந்த என் முகத்தில் வந்து விழுந்தது” என்றார் ரம்யாகிருஷ்ணன்.

(முந்தைய காலணி வரலாற்று செய்தியில், அரசியல் தலைகள் பற்றி மட்டும் இருந்ததால்,  சினிமா பற்றி தனி செய்தி. இத்தோடு காலணி வரலாறு முடிந்தது.)

– தமிழ் இனியா