ஜுபுல்ஜனா: தனது நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் முடிந்தது என்றுகூறி,  எல்லைகளை திறந்து விட்டுள்ளது கிழக்கு ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவின் அரசு.
அதேசமயம், அந்நாட்டில் இன்னும் புதிதாக நோய் தொற்றியவர்கள் குறித்த அறிவிப்புகள் வந்துகொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்லோவேனியா நாட்டில் பெருவாரியான நோய் தொற்று அறிவிப்பு செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில், “இன்றைய நிலையில், ஐரோப்பாவில் சிறந்த நோய்க் கட்டுப்பாட்டுச் சூழலை ஸ்லோவேனியா கொண்டுள்ளது. இந்த நிலையே, பொது ஊரங்கை முடிவுக்கு கொண்டுவரும் நிலைக்கு நம்மைக் கொண்டு வந்துள்ளது” என்றார் அந்நாட்டுப் பிரதமர் ஜேனஸ் ஜன்ஸா.
வெறும் 20 லட்சம் மக்களே வாழக்கூடிய அந்த மலை நாட்டில், மொத்தம் 1500 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்றும், இதனால் 103 பேர் இறந்துள்ளனர் என்றும் கடந்த வியாழனன்று தகவல்கள் தெரிவித்தன.
அதேசமயம், புதிய தொற்று குறித்த செய்திகள் வரும் நிலையிலும்கூட, அந்நாடு தனது எல்லைகளை அனைத்து ஐரோப்பிய யூனியன் குடிமக்களுக்கும் திறந்துவிடுவதாக அறிவித்துள்ளது. ஆனால், ஐரோப்பிய யூனியனைச் சாராத இதர நாடுகளின் குடிமக்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.