லடாக் எல்லையில் ஏற்பட்ட இந்தியா – சீனா இடையிலான சிறிய பதற்றம்!

லே: லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள பாங்கோங் ஏரியின் வடக்கு கரையின் அருகே, இந்தியா மற்றும் சீனத் துருப்புகளுக்கு இடையே ஏற்பட்ட சிறியளவிலான பதற்றம் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு வந்தது.

பாங்கோங் ஏரியின் வடக்கு கரையின் அருகே இந்திய ராணுவம் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் இருந்த சீன ராணுவத்தினர், இந்திய ராணுவத்தின் ரோந்துக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே சிறிய பதற்றம் ஏற்பட்டது.

ஆனால், உடனே ராணுவப் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று இந்த பதற்றம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலமாக ஆட்குறைப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்துசெய்யப்பட்டதற்கும், லடாக்கின் நிலையில் மாற்றம் செய்யப்பட்டதற்கும் சீனா தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.
இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த உலகின் சில நாடுகளில் சீனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கும் சீனாவிற்குமான எல்லைப் பிரச்சினையின் நீளம் சுமார் 3,488 கிலோ மீட்டர்கள். இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை, சீனா தெற்கு திபெத் என்று உரிமைக் கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.