டில்லி

பொருளாதார சுனாமி வந்துக் கொண்டிருப்பதால் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அழிந்து வருவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

கொரோனா தாக்குதல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கை முறையாக மத்திய அரசு பயன்படுத்தவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.  இதனால் நாட்டில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்து வருகிறார்.

அவர் நேற்று தந்து டிவிட்டர் பக்கத்தில், ”கிராமப்புறங்களில் இருக்கும் குடும்பங்கள் நகர்ப்புறங்களில் இருக்கும் குடும்பங்களைக் காட்டிலும், ஏழ்மையில் சென்றுவிட்டன.  சராசரியாக 10 குடும்பங்களில் 8 குடும்பங்களுக்கு ஊரடங்கு காலத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இன்று தனது டிவிட்டரில் ராகுல் காந்தி, “நடுத்தர சிறு மற்றும் குறு நிறுவனங்கள் அழிந்துவிட்டன.  மேலும் பெரு நிறுவனங்கள் மிகப்பெரிய அழுத்தத்தில் சிக்கி இருக்கின்றன. இது போல் வங்கிகளும் பெரும் இக்கட்டான சூழலில் இருக்கின்றன.  ஏற்கனவே வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்து வருவதை நான் குறிப்பிட்டிருந்தேன்.

சில மாதங்களுக்கு முன்பு இருந்தே கொரோனா வைரஸைத் தொடர்ந்து, ஒரு பொருளாதார சுனாமி வந்துகொண்டிருக்கிறது என்று எச்சரித்திருந்தேன்.  ஆனால் எனது எச்சரிக்கைகள் பாஜக அரசால் கேலி செய்யப்பட்டன.  எனது வார்த்தையில் இருந்த உண்மையை அறிந்த ஊடகங்கள் நாட்டுக்கு எச்சரித்தன” எனத் தெரிவித்துள்ளார்.