பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை:

ரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க கல்வித்துறை  அதிகாரிகளுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதையே பஸ் பாஸாகவும் உபயோகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக சட்டமன்றத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஸ்மார்ட் கார்டுகளை விரைவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் 413 வட்டாரக் கல்வி அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்மார்ட் கார்ட் பெற்றப்பட்ட 24 மணி நேரத்தில் தலைமை ஆசிரியரை அழைத்து நேரடியாக ஒப்படைக்க வேண்டும். அதனை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு பெற்றுக்கொண்டதற்கான விவரங்களை இணப்பில் உள்ள படிவத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளிக்க வேண்டும்.

அதனை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலரிடம் நேரில் வழங்கிட வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர் தங்களின் கட்டுப்பாட்டில் வரும் தலைமை ஆசிரியர்களிடம் பெற்ற ஒப்புதல் கடிதங்களை தொகுத்து அறிக்கையாக முதன்மை கல்வி அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலர் தம் ஆளுகையின் கீழ் வரும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் கடிதங்கள் மற்றும் அறிக்கைகளை தொகுத்து வருவாய் மாவட்ட அளவிலான அறிக்கையாக இணை இயக்குநரிடம்(தொழிற்கல்வி) நேரில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு பள்ளிகல்வித்துறை அனுப்பிய அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.