கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்  அ. குமரேசன்

இந்தியாவின் தேசிய நூலாக பகவத் கீதை அறிவிக்கப்பட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் கிளப்பி விடப்பட்டு, குறிப்பிட்ட மதம் சார்ந்த அதை எப்படி நாட்டு மக்கள் அனைவருக்குமானதாக ஏற்க முடியும் என்று பெரும் விவாதத்திற்கு உள்ளாகி, தற்போதைக்கு அடங்கியிருக்கிறது.

நாட்டு மக்கள் யாவரும் ஒரு மனதாக ஏற்கக்கூடிய தேசிய நூல் ஒன்று இருக்கிறது. அதுதான் ‘இந்திய அரசமைப்பு சாசனம்’. அதற்கான முக்கியத் தகுதி, அது மதச்சார்பற்றது, சாதிச்சார்பற்றது, பாலினச்சார்பற்றது. நீதிமன்றங்கள் வழங்கியுள்ள பல முற்போக்கான தீர்ப்புகளின் நம்பகமான அடித்தளமாகிய அரசமைப்பு சாசனம் அரசின் பொறுப்பு களையும் அதிகாரங்களை மட்டும் வரையறுக்கவில்லை, குடிமக்களின் உரிமைகளையும் கடமைகளையும் கூட வகுத்துரைக்கிறது. அதன் பிரிவு 5, சட்ட உரை 51ஏ, துணைக்கூறு 8 (எச்), “அறிவியல் மனப்பாங்கு, மானுடம் ஆகியவற்றையும், தேடல் மற்றும் சீர்திருத்த உணர்வையும் வளர்த்தல்,” ஒரு கடமை என்கிறது.

நடப்பு  மாதம் 16 முதல் 20 வரையில் மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் 105வது இந்திய அறிவியல் மாநாடு நடை பெற்றது. மாநாட்டுத் தொடக்க நாளில் உரையாற்றிய, பிரதமர் நரேந்திர மோடி, அறிவியல்-தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இருவரின் கருத்துகள் இந்தச் சட்டப் பிரிவு பற்றிய சிந்தனைகளைக் கிளறுகின்றன. “அறிவியலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் 100 மணி நேரமாவது குழந்தைகளுடன் செலவிட வேண்டும், அது சமுதாயத்தில் அறிவியல் பரவத் தூண்டுதலாக இருக்கும்,” என்றார் பிரதமர். ஓராண்டின் 8,760 மணி நேரமும் குழந்தைகளை அறிவியல் கண்ணோட்டத்திற்குப் புறம்பான சங்கதிகள் ஆக்கிரத்துக்கொண்டிருக்கின்றன, அதிலிருந்து ஒரு நூறு மணி நேரத்தை அறிவியலாளர்கள் எப்படி மீட்பார்கள்?

அமைச்சர் பேசுகையில் அண்மையில் காலமான பேரண்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிக் குறிப்பிட் டார். “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த இ=எம்சி ஸ்கொயர் என்ற சமன்பாட்டைக் காட்டிலும் உன்னதமான அறிவியல் கோட்பாடுகள் இந்திய வேதங்களில் இருந்திருக்கின்றன என்று ஸ்டீபன் ஹாக்கிங்கே கூறியிருக் கிறார்,” என்று சொல்லி அறிவியலாளர்களை அசர வைத்தார். ஹாக்கிங் பற்றிய தகவலுக்கு ஆதாரம் தர இயலுமா என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது. “அதைத் தேடுவது உங்கள் வேலை,” என்று கூறி நழுவினார். சரிதான் என்று ஊடகவியலாளர்கள் தேடியதில் அது முகநூலில் ஹாக்கிங் பெயரில் உலாவவிடப்பட்டிருந்த ஒரு போலிக்கணக்கில் உள்ள கருத்து என்பது தெரியவந்தது!

நாட்டில் பல செயல்கள் “அறிவியல் மனப்பாங்கை வளர்த்தல்” என்ற அரசமைப்பு சாசனக் கடமைக்கு முற்றிலும் நேர்மாறாக அல்லவா இருக்கின்றன? அது குடிமக்களுக்கான கடமைதான் என்று கூறி அரசு  நழுவ முடியாது. அந்த மனப்பாங்கை வளர்ப்பதில் அரசுக்குப் பொறுப்பிருக்கிறது என்பதைப் போலவே, அதை வளர்க்கத் தவறியதற்கும் அரசு பொறுப்பேற்கத்தான் வேண்டும்.

அறிவியல் மனப்பாங்கு என்றால்…

அறிவியல் மனப்பாங்கை வளர்த்தல் என்றால் என்ன? சமுதாயத்தில் அறிவியல் பரவ வேண்டும் என்று கூறிய பிரதமருக்கு இருக்கிற இது பற்றிய புரிதல் என்ன? அறிவியலும் தொழில்நுட்பமும் சமுதாயத்தில் பரவிக்கொண்டு தான் இருக்கின்றன. ஸ்மார்ட் போன் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கை வசதிகள், ஸ்கேன் உள்ளிட்ட நவீன மருத்துவ சோதனைகள்‘, புதிய இருசக்கர – நான்கு சக்கர வாகனங்கள், அதிவேக ரயில்கள், விமானங்கள், சுவரோடு ஒட்டிக்கொள்ளும் மெல்லிய தொலைக்காட்சிப் பெட்டிகள், இதற்கெல்லாம் தேவைப்படும் பணப்பரிமாற்றத்திற்கான ஆப்ஸ்கள், சமூக வலைத்தளங்கள்…. என்று சொல்லிக்கொண்டே போகலாம். பேரண்டத்தையும் உயிர்களையும் படைத்து இயக்கிக்கொண்டிருப்பதாகக் கூறப்படும் கடவுள்களுக்காகக் கட்டப்பட்டுள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களிலும் எல்இடீ விளக்குகள் ஒளிர்கின்றன. நுகர்பொருளாக மட்டுமே சமுதாயத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் பரவுவதையே இவை காட்டுகின்றன.

அறிவியல் மனப்பாங்கு என்றால் இயற்கையை, வாழ்க்கையை, சக மனிதர்களை, பிற உயிர்களைப் புரிந்துகொண்டு, அந்த அடிப்படையில் எதையும் அணுகுவது. நம்மைச் சுற்றி நிகழ்வனவற்றின் காரணங்களை ஆராய்ந்து செயல்படுவது. நிகழ்காலத்தில் வாழ்வதை மட்டுமல்ல, கடந்த காலத்தில் வாழ்ந்த வரலாற்றையும் அறிந்துகொள்வது. அரசியல், சமுதாயம், பண்பாடு, பொருளாதாரம், தொழில், குடும்பம், கல்வி என்று அனைத்துத் தளங்களிலும் தேவைப்படுவது.

தகுதி மீட்பு நடவடிக்கை

மக்களின் சேமிப்புகளைக் கார்ப்பரேட் கருவூலங்களுக்குக் கடத்துகிற நிதி வன்முறைகளையும், அதனால் விளையும் கொந்தளிப்புகளையும் பற்றிய தெளிவு ஒரு அறிவியல் மனப்பாங்குதான். அதற்கு முடிவுகட்டும் போராட்டத்தில் இணைவதும் அதே மனப்பாங்குதான். பொருளாதார அறிவியல் இது.

தாய்மொழி வழிக் கல்வியின் தேவையைப் புரிந்துகொள்வதும், பிறமொழித் திணிப்புகளைக் கைவிடுவதும் அறிவியல் மனப்பாங்குதான்.  சமூகநீதிக்கான இட ஒதுக்கீடு உண்மைத் தகுதியைப் புறக்கணிப்பதல்ல, காலங்காலமாக மறைக்கப்பட்ட பெரும்பகுதி மக்களின் தகுதியை மீட்கிற இயக்கம் என்று ஏற்றுக்கொள்வது சமூக அறிவியல்.

பலகோடி ஆண்டுகளாக உயிர்களிடையே ஏற்பட்ட கலப்பிலிருந்துதான் புதிய உயிரினங்கள் பரிணமித்தன, மனிதர்களும் பிறந்தார்கள். இன்று சாதியின் பெயரால், மதத்தின் ஆணையால் காதலுக்கு எதிராக, மனிதர்கள் கலப்பதற்கும் எதிராக ஆணவ அரிவாள்களைத் தூக்கப்படுகின்றன. அது மானுடவியல் அறிவியல் மனப்பாங்கைக் கொன்றொழிக்கும் பரிணாம வீழ்ச்சி. ஆண்ட பரம்பறைப் போதை(தனை)களுக்குள் மூழ்காமலிருப்பது அறிவியல் மனப்பாங்கைக் காப்பாற்றும் எழுச்சி.

கணித உலகிற்குப் பூஜ்யம் என்ற எண்ணைக் கொடுத்தது உள்ளிட்ட பல மகத்தான பங்களிப்புகளைச் செய்த முற்காலம் இந்திய மண்ணுக்கு உண்டு. வானியல் அறிவுடன் இத்தகைய சாதகமான பங்களிப்பைச் செய்த மண்ணில், பின்னர்  ஜாதகம், விதிவசம் முதலியவை ஆக்கிரமிக்க அனுமதிக்கப்பட்டது. அது உலக அறிவியல் களத்தில் இந்தியாவை ஈராயிரம் ஆண்டுகள் பின்தங்கிப்போக வைத்தது. இதை ஒப்புக்கொள்கிற அறிவியல் மனப்பாங்குதான் இந்நிலையை மாற்றுவதற்கு இட்டுச்செல்லும். வேத காலத்திலேயே ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் இருந்தன என்பதான வெற்றுப் பெருமிதங்கள், அவ்வளவு நவீன அறிவியல் வளர்ச்சியோடு இருந்தபோதிலும், இங்கிருந்த மன்னர்களால் ஏன் அந்நிய படையெடுப்புகளை முறியடிக்க முடியவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்தாக வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும்.

கனவு நனவாக

இந்தியா என்றென்றும் இன்றிருப்பது போல ஒரே நாடாக இருக்கவில்லை. ஆங்காங்கே ஆண்ட பெரிய, சிறிய மன்னர்களின் நாடுகளாகவே சிதறுண்டு கிடந்த எல்லை கள், உலகின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்களின் ஆட்சிகளால்தான் ஒருங்கிணைக்கப்பட்டடன. ஒன்று பட்ட விடுதலைப் போராட்டத்தின் பலனாக இன்றைய இந்தியாவின் வரைபடம் உருவெடுத்தது. போலிப் பெருமைகளுக்குள் சிக்காமல் இதை ஒப்புக்கொள்கிற மனப்பாங்குதான் மாநில சுயாட்சியை மதிப்பது உள்ளிட்ட நிர்வாக அறிவியல் தெளிவுக்கு இட்டுச்செல்லும்.

அறிவியல் பட்டம் பெறுவதற்கு வேண்டுமானால் கல்வித் தகுதி தேவைப்படலாம். அறிவியல் மனப்பாங்கு வளர்வதற்குத் தேவைப்படுவது பாடத்திட்ட முறை சார்ந்த கல்வியில்ல. பள்ளிக்கூடமே செல்லாவிட்டாலும் இந்த மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள முடியும். ஒரு கல்யாண வீட்டில் சடங்குகள் சம்பந்தமான பிரச்சனை வந்தது. பையனின் குடும்பத்தார் குறிப்பிட்ட சடங்கை வற்புறுத்த, அதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத பெண்ணும் அவளுடைய பெற்றோரும் அதை மறுக்க, சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது தகராறாகிவிட்டது. அப்போது மணமகனின் உறவினர், செல்வாக்குள்ளவர், வயதிலும் மூத்தவர் ஒருவர் தலையிட்டார். “ஏய், என்னங்கப்பா இந்தக் காலத்தில போயி இதெல்லாம் பார்த்துக்கிட்டு… பிள்ளைக சந்தோசமா இருக்கிறதுக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்கப்பா போதும்…” என்று  கொஞ்சம் அதிகாரத் தொணியிலேயே பஞ்சாயத்துச் செய்தார். சடங்கை வற்புறுத்தியவர்கள் அதை விலக்கிக்கொண்டு, சும்மா அடையாளத்துககாக மட்டும் கையில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். பெரியவர் “என்ன சொல்றீங்க” என்று கேட்க மணமகள் இல்லாத்தார் அதை ஏற்றுக்கொண்டார்கள். அந்த மூத்தவரிடம் இருந்தது அறிவியல் மனப்பாங்குதான்.

துப்பாக்கிகளையோ கடப்பாறைகளையோ தூக்காமல் மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்வது, கருத்தைக் கருத்தால் மறுப்பது போன்ற அடிப்படையான கருத்துச் சுதந்திர மரியாதைகள் விலங்கிடப்படாத அறிவியல் மனப்பாங்குடன் பாதுகாக்கப்படட்டும். இவையெல்லாம் இனிய கனவுகளாகக் கலைந்துவிடாமல் வாழ்க்கை நனவுகளாக மாற்றுகிற பேரியக்கமும் அறிவியல் மனப்பாங்கிலிருந்து ஊற்றெடுக்கட்டும்.