சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலியா, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை எடுத்துள்ளது. லபுஷேன் மற்றும் ஸ்மித் ஜோடி, நிலைத்து நின்று ஆடி வருகின்றனர்.

முதல் இன்னிங்ஸில், இந்தியாவை விட 94 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது ஆஸ்திரேலிய அணி.

அதன்படி, டேவிட் வார்னரும் வில் புகோவ்ஸ்கியும் களம் கண்டனர். ஆனால், இருவருமே இந்தமுறை நீண்டநேரம் நிலைக்கவில்லை. டேவிட் வார்னரை அஸ்வின் 13 ரன்களில் திருப்பியனுப்பினார்.

வில் புகோவ்ஸ்கியை இந்தமுறை காலி செய்தவர் முகமது சிராஜ். புகோவ்ஸ்கி 10 ரன்களை எட்டியிருந்தபோது, சிராஜ் அவரை காலி செய்தார்.

பிறகு, முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய லபுஷேன் – ஸ்மித் மீண்டும் இணைந்தனர். அவர்களின் விக்கெட் விரைவாக வீழும் என்று எதிர்பார்த்த நேரத்தில், அவர்கள் கடந்தமுறையைப் போலவே இந்தமுறையும் நிலைத்து நின்று விட்டனர்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், லபுஷேன் 47 ரன்களுடனும், ஸ்மித் 29 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இவர்களின் விக்கெட்டை நாளை காலை விரைவிலேயே காலிசெய்யாத பட்சத்தில், இந்தியா அணிக்கு மிகப்பெரிய சிக்கலாகி விடும் என்பது மட்டும் உண்மை.