ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் என்ற யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்துள்ளது இந்திய அணி.

கடந்தமுறை விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்றபோது, ஸ்மித் & வார்னர் இல்லாத பலவீனமான ஆஸ்திரேலிய அணியையே இந்திய அணி வென்றுள்ளது. ஆனால், அவர்கள் இருந்திருந்தால் இந்தியா தோற்றிருக்கும் என்று சிலர் விமர்சித்தார்கள். அப்போது, பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு 1 ஆண்டுகாலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது எல்லாமே தலைகீழாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் உள்ளிட்ட அனைவருமே உள்ளனர். ஆனால், மாறாக, இந்திய அணியில்தான் நிலைமையே மோசம். விராத் கோலி உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் இல்லை மற்றும் மனதளவிலும் பலவித பிரச்சினைகள்.

ஆனால், இந்தப் புதிய மற்றும் அனுபவமற்ற இந்திய இளம்படை, அனைத்து முக்கிய வீரர்களும் இடம்பெற்ற ஆஸ்திரேலியாவை சாய்த்துள்ளது. இதன்மூலம், கடந்தமுறை பெற்ற வெற்றியை விமர்சித்தவர்களின் வாய்க்கு பெரிய திண்டுக்கல் பூட்டை மாட்டியுள்ளது.