சிட்னி: ஸ்டீவ் ஸ்மித்தை ரன் அவுட்டாக்கியது தனது ஃபீல்டிங் முயற்சிகளில் சிறந்தது என்று மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் ரவீந்திர ஜடேஜா.

சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், சதமடித்தார் ஸ்டீவ் ஸ்மித். கடைசி விக்கெட்டுடன் ஜோடி சேர்ந்து அவர் தளராமல் ஆடிக் கொண்டிருந்தார். நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அவர், கடைசிவரை அவுட்டாகாமல் நின்று கொண்டிருந்தார்.

ஒருவழியாக 131 ரன்களை எடுத்திருந்தபோது, ஜடேஜாவின் கிளீன் த்ரோவினால் ரன்அவுட் செய்யப்பட்டார். 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே நின்று பீல்டிங் செய்த ஜடேஜா, இந்த அற்புதமான ரன்அவுட்டை செய்தார். அந்த ரன்அவுட் தவறவிடப்பட்டிருந்தால், ஹேசில்வுட்டுடன் இணைந்து இன்னும் 20 ரன்களையாவது சேர்த்திருப்பார் ஸ்மித்.

உலகளவில், சிறந்த பீல்டர்களில் ஒருவராக பரிணமிக்க ஜடேஜா கூறியுள்ளதாவது, “ஸ்மித்தை ரன் அவுட் ஆக்கியதானது, எனது சிறந்த பீல்டிங் முயற்சியாகும். நான் கிரிக்கெட் விளையாடத் துவங்கிய நாட்களிலிருந்தே ஆட்டத்தின் இரண்டு அம்சங்களிலும்(பேட்டிங், பீல்டிங்) சிறந்த பங்களிப்ப‍ை செய்ய வேண்டுமென செயல்பட்டு வருபவன்.

எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். நான் எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்பட்டுக் கொள்வதில்லை. என்னால் ஆனதை, கிடைக்கும் வாய்ப்புகளில் செய்து கொண்டுள்ளேன்” என்றுள்ளார் ஜடேஜா.

ஸ்மித் ரன்அவுட்டை சேர்த்து, முதல் இன்னிங்ஸில் மட்டும் மொத்தமாக 5 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார் ஜடேஜா.