நியூயார்க்:

குறைவான நிகோடின் இருக்கிறது என்பதற்காக லைட் சிகரெட் புகைப்பவரா நீங்கள்?.. இனி ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து இத்தகைய சிகரெட்டை புகைக்கவும். ஆம்.. இத்தகைய சிகரெட் புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகளவில் இத்தகைய சிகரெட்கள் ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

லைட், மைல்ட்ஸ் போன்ற சிகரெட்கள் உயர் காற்றோட்டம் உள்ளவையாக கருதப்படுகிறது. வழக்கமான சிகரெட்களை விட இதில் குறைவான நிக்கோடின், கெமிக்கல் உள்ளவையாக கூறப்படுகிறது. இவை ஆரோக்கியமானது என்று கூறுவது புகையிலை நிறுவனங்களின் வியாபார யுக்தி. இவை நுரையீரலில் காளப்புற்றுவை உருவாக்குகிறது. இது பொதுவாக நுரையீரல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.

‘‘சிகரெட் பில்டர்களில் உள்ள உயர் காற்றோட்ட ஓட்டைகள் மூலம் தான் இந்த நோய் அதிகளவில் உருவாகிறது. இந்த பில்டர்கள் மூலம் அதிகளவிலான ரசாயன கலவை உள் இழுக்கப்படுகிறது. புகையிலை எரியும் போது புற்றுநோயை உருவாக்க கூடிய சக்தியை இந்த பில்டர்களில் உள்ள ஓட்டைகள் ஏற்ப டுத்துகிறது. நுரையீரலில் ஆழ்பகுதி வரை புகை செல்வதற்கு இந்த பில்டர்கள் உதவுகிறது’’ என்று அமெரி க்காவின் ஓஹியோ பல்கலைக்கழக பேராசிரியர் பீட்டர் ஷீல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

சிகரெட் பில்டர்களில் உள்ள ஓட்டைகள் பாதுகாப்பானது என்று கூறி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. ‘‘இது புகைப்பிடிப்பவர்களை முட்டாளாக்க கூடிய செயலாகும். இது பாதுகாப்பானது என்று மக்களும் நம்பிக் கொண்டுள்ளனர்’’என்றார் ஷீல்டு.

‘‘கடந்த 20 ஆண்டுகளாக இந்த உயர் காற்றோட்ட ஓட்டைகள் நுரையீரல் புற்றுநோயை அதிகரித்து வருவது எங்களது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அந்த ஓட்டைகள் தற்போது விற்பனை செய்யப்படும் சிகரெட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயர் காற்றோட்ட ஓட்டைகள் உள்ள சிகரெட்களை தடை செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண் டுள்ளனர்.