மீபத்தில் நடந்து முடிந்த ஜராத் மாநில சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 182 தொகுதிகளில், பா.ஜ.க, 99 தொகுதிகளில் வென்று, ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

காங்., 80 தொகுதிகளில் வென்று, சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது.

பா.ஜ.க. வெற்றி பெற்ற இடங்கள் குறைந்துள்ளதால் தற்போதைய முதல்வர் முதல்வர் விஜய் ரூபானி மீது, அக் கட்சிக்குள் அதிருப்தி எழுந்துள்ளது. ஆகவே அவர் மீண்டும் முதல்வராக கட்சி மேலிடத்தால் அமர வைக்கமாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி முதல்வர் ஆக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வலுவான எதிர்க்கட்சியாக உருவாகியுள்ள காங்கிரசை சமாளிக்கும் வகையில், பேச்சுத் திறன் மற்றும் ஆளுமை உள்ள ஸ்மிருதி தகுதியானவர் என்று கட்சியினர் கருதுவதாக கூறப்படுகிறது.  பிரதமர் மோடி மற்றும் கட்சி தலைவர், அமித் ஷாவின் நம்பிக்கையை பெற்றுள்ளவர் ஸ்மிருதி இரானி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இது இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, கட்சியின் மேலிட பார்வையாளர்களாக, மத்திய நிதிஅமைச்சர், அருண் ஜெட்லி, கட்சியின் பொதுச் செயலர், சரோஜ் பாண்டே நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் தான் முதல்வராக்கப்படலாம் என்பதை ஸ்மிருதி இரானி மறுத்து உள்ளார்.

இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து துறை இணையமைச்சர், மன்சுக் மாண்டவியா வின் பெயரும் முதல்வர் பதவிக்கான பரிசீலனையில் இருக்கிறது.  சவுராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த  இவர் படேல் சமுதாயத்தில் செல்வாக்குள்ளவர்.

கர்நாடக கவர்னர், வஜுபாய் வாலாவின் பெயரும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது. குஜராத் சட்ட சபை சபாநாயகராகவும், மாநில அமைச்சராகவும் பணியாற்றியவர் அவர்.

மேலும் தற்போதைய துணை முதல்வர், நிதின் படேல், மத்திய வேளாண் துறை இணையமைச்சர், புருஷோத்தம் ரூபாலா ஆகியோரின் பெயர்களும், அடிபடுகின்றன.