ராமரை வணங்காதவர்களுக்கு ராம பக்தர்களின் வாக்கு கிடைக்காது : ஸ்மிரிதி இரானி

பாதோன்

ராமரை வணங்காதவர்களுக்கு ராம் பக்தர்களின் வாக்கு கிடைக்காது என ஸ்மிரிதி இராணி கூறி உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அக்கட்சியின் செயலர் பிரியங்கா காந்தி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரசாரப் பயணத்தில் அயோத்தி நகருக்கு சென்றிருந்தார். அங்கிருந்த புகழ்பெற்ற அனுமான் கார்கி ஆலயத்துக்கு சென்று பிரியங்க காந்தி வழிபாடு நடத்தினார்.

ஆனால் பிரியங்கா காந்தி பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள ராம் ஜென்ம பூமி கோவிலுக்கு செல்லவில்லை. இது குறித்து பிரியங்கா காந்தி அந்த இடம் வழக்கு சம்பந்ந்தப்பட்ட இடம் என்பதால் அங்கு தாம் செல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். இது ஒரு நல்ல முடிவு என பொதுமக்கள் பாராட்டினாலும் பாஜகவினர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பாதோன் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில், “கடவுளிடமும் அரசியலைக் காணும் இந்த மக்களை பாருங்கள். அவர்கள் அயோத்திக்கு செல்வார்களாம். ஆனால் குழந்தை ராமரை வணங்க மாட்டார்களாம். வாக்கு வங்கி சிதறக் கூடாது என்னும் பயத்தில் இவ்வாறு நடந்துக் கொள்கின்றனர்.

அவர்களுக்கு ராம பக்தர்களின் வாக்குகள் கிடைக்காது. தேர்தல் தினத்தன்று ராம பக்தர்கள் வாக்குச் சாவடிக்கு சென்று தங்கள் முன்னேற்றத்துக்கு வாக்களிப்பார்கள் “ என கூறி உள்ளார். ஏற்கனவே பிரியங்காவின் கங்கை யாத்திரையை குறித்தும் இரானி கடுமையாக தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.