silai_0
சென்னையில் கடத்தல்காரர்  தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையை சேர்ந்த தொழிலதிபர் தீனதயாளன். இவரது வீட்டில் பழங்கால கோவில் சிலைகளை திருடி பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவருடைய வீட்டில் கடந்த 31ம் தேதி முதல் 4 நாட்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர்  சோதனை நடத்தினர். இதில்  43 ஐம்பொன் சிலைகளும், 71 கற்சிலைகளும் கைப்பற்றப்பட்டன.   மேலும்  அந்த வீட்டில் வேலை செய்த 3 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தொழிலதிபர் தீனதயாளன், சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் சரண் அடைந்தார்.
இதையடுத்து மத்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் சத்தியபாமா தலைமையிலான குழுவினர், தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளை ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஆய்வு முடிந்த பிறகு இச் சிலைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.