சென்னை:

மீப காலமாக குங்குமப்பூ கடத்தல் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக ஈரானிய நாட்டைச் சேர்ந்த குங்குமப்பூ கடத்தி வரப்படுவது அதிகரித்து உள்ளதாகவும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குங்குமப்பூ உலக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே பிரசித்திப் பெற்ற பெயர்.  பெண் கருவுற்றிருக்கும் போது குங்குமப்பூவை உணவில் சேர்த்து கொண்டால் பிறக்கும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் நிலவிவருகிறது. இது அறிவியல் பூர்வமாக உண்மையா என்பது கேள்விக்குறிதான். இருந்தாலும், பெண்கள் கர்பம் தரித்தவுடன், குங்குமப்பூ கொடுப்பது நம் சமூகத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் பழக்கம்.

இதன் காரணமாக குங்குமப்பூ கடத்தலும் அதிகரித்து வருகிறது. பொதுவாக இந்தியாவில் காஷ்மீர் குங்குமப்பூவுக்கு தனி மவுசு உண்டு. அதுபோல ஈரானிய குங்குமப்பூவும் பெயர் பெற்றது. காஷ்மீரில் போதுமான அளவு குங்குமப்பூ கிடைப்பதில்லை. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து குங்குமப்பூ கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதம், ஈரானில் இருந்து வந்தவரிடம், டில்லி விமான நிலையத்தில், ரூ.33 லட்சம் மதிப்புள்ள குங்குமப் பூ கைப்பற்றப்பட்டது. அதுபோல, துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 60 லட்ச ரூபாய் மதிப்பிலான, குங்குமப்பூவை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த நிலையில் சமீபத்தில் சுமார் 50 கிலோ கிராம் அளவிலான குங்குமப்பூவை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த குங்குப்பூவானது  ஒரு கிராம் ரூ .200 முதல் ரூ .240க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதிகப்பட்சமாக  5 கிராம் -10 கிராம் பெட்டிகளில் விற்கப்படுகிறது

கடத்தல்காரர்கள் ஈரானிய  குங்குமப்பூவை  காஷ்மீரி குங்குமப்பூவுடன் கலந்து அதிக விலைக்கு விற்கு பெரும் லாபம் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. காஷ்மீரி குங்குமப்பூவை விட ஈரானிய குங்குமப்பூ சிறப்பானது என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே, ஈரானில் இருந்து குங்குமப்பூ கடத்தப்பட்டு வருவது அதிகரித்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

குங்குமப்பூ உணவில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, இது சருமத்திற்கு நல்லது மற்றும் பாலுணர்வை தூண்டுவதாகவும் மக்களிடையே நம்பிகை உள்ளது குறிப்பிடத்தக்கது.