இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரவாதிகளை ஊக்கப்படுத்துகிறது: பாகிஸ்தான்

வாஷிங்டன்,

இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே வெளிப்படையான அமைதிப்பேச்சு வார்த்தை தீவிரவாதிகளுக்கு ஊக்கம் தருகிறது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் நாட்டின் புதிய தூதுவர் அஹமத் சவுத்ரி வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இதனைத் தெரிவித்த  அவர், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதெல்லாம் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக  கூறினார்.

தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து இந்தியா பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்கிவிடுவதாக கூறிய சவுத்ரி,  இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ஒருவேளை தீவிரவாதிகளை ஊக்கப்படுத்துகிறதோ என நினைக்கவேண்டியதாக  உள்ளது  என தெரிவித்தார்.   இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியான உறவு இருக்கவேண்டும் என விரும்புவதாக அவர் கூறினார்.

இந்தமாதத் தொடக்கத்தில் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிப்பது தொடர்பான விவாதம் அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் எழுந்தது. அது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த சவுத்ரி, அதிபர் ட்ரம்ப்  பாகிஸ்தான் குறித்து நேர்மறையான கருத்தையே கொண்டிருப்பதாக கூறினார்.

English Summary
Snapping of India-Pak talks only encourages terrorists, says Pakistan’s new envoy to US