சென்னை: தமிழக தலைநகர் சென்னையில், கொரோனா தொற்று காரணமாக சென்னை மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்டு வரும் சிறப்புக் காய்ச்சல் முகாம் மூலம்  17 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்புக் காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அதன்படி கடந்த மே மாதம் 8 -ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ந்தேதி வரை 41,651  சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது.  இதில், 22,29,559 பேர் பங்கு பெற்றுள்ளனா். இவர்களில், 17 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதாகவும், அதாவது, 1,30,533 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

அதிகபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் 41 சதவீதமும், மணலியில் 29 சதவீதமும், வளசர வாக்கம், ஆலந்தூரில் தலா 28 சதவீதமும், அண்ணா நகரில் 27 சதவீதமும், கோடம் பாக்கத்தில் 26 சதவீதமும்,பெருங்குடியில் 21 சதவீதமும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று (செப்டம்பர் 2ந்தேதி) ஒரே நாளில் 461 காய்ச்சல் கிளிக்குகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 22,328 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில், 1,122 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.