தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லை! கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

சென்னை:

கொரோனா வைரஸ் தொற்று குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை,  தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று  தமிழக சட்டமன்றத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் திமுக,அதிமுக, காங்கிரஸ் முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்கப்பட்டது. திமுக தரப்பில் சரவணன் எம்எல்ஏவும், காங்கிரஸ் தரப்பில் கே.ஆர்.ராமசாமி, முஸ்லிம் லீக் சார்பில் அபுபக்கர், அதிமுக சார்பில் பரமசிவம் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

இது தொடர்பாக இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது, நாடு முழுவதும் “கொரோனா வைரசை விட வதந்திகள் வேகமாக பரவுகிறது. அமைச்சர்கள் கூட கை கொடுக்க மறுக்கிறார்கள். எனவே தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்ததுடன்,  மக்களின்  தற்காப்புக்காக முக கவசம், கிருமி நாசினி போன்றை தட்டுபாடின்றி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர், கொரோனா குறித்த  வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நமது மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள்,  பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர்…  மக்களிடம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். யாரும் பதட்டம் அடைய வேண்டாம், அரசிடம் தேவைய முகக்கவசம், மருந்துகள் உள்ளன என்று தெரிவித்தார். மேலும்,   இதுவரை 1 லட்சத்து 46 ஆயிரம் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் 1465 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று கூறியவர், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் நோய் தொற்று பரவவில்லை என்று கூறினார்.

மேலும், இதுவரை 1 லட்சத்து 46 ஆயிரம் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் 1465 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து நாடுகளில் இருந்து வருபவர்களையும் மருந்துவ பரிசோதனை செய்த பிறகே வெளியே அனுப்புகிறோம். பொதுமக்கள்  வீடுகளுக்கு செல்லும் போது சாதாரண சோப் போட்டு கை, கால், முகத்தை கழுவினாலே போதும் என வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.