எத்தனை எத்தனை சாதனைகள் இந்த டெஸ்ட் போட்டியில்..!

விசாகப்பட்டணம்: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில்தான், உலக டெஸ்ட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட போட்டி என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அஸ்வினின் விரைவான 350 விக்கெட்டுகள் மற்றும் ரோகித் ஷர்மாவின் அதிக சிக்ஸர்கள் மற்றும் ஜடேஜாவின் அதிவேக 200 விக்கெட்டுகள் என்று பல சாதனைகள் படைக்கப்பட்ட நிலையில், ஒரே டெஸ்ட் போட்டியின் அதிக சிக்ஸர்கள் என்ற சாதனையும் அவற்றுடன் இணைந்துள்ளது.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை மொத்தம் 37. அதில் இந்தியாவின் பங்கு 27 மற்றும் தென்னாப்பிரிக்காவின் பங்கு 10.

இந்திய தரப்பில் ரோகித் ஷர்மா மட்டுமே 13 சிக்ஸர்கள் அடித்தார். கடந்த 2014-15ம் ஆண்டில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் 35 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. இப்போட்டியில் அச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ரோகித் ஷர்மா தவிர, மயங்க் அகர்வால் 6 சிக்ஸர்கள், ஜடேஜா 4 சிக்ஸர்கள், புஜாரா 2 சிக்ஸர்கள், கோலி மற்றும் ரஹானே ஆகியோர் தலா 1 சிக்ஸரும் அடித்தனர்.

தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 7 சிக்ஸர்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 சிக்ஸர்களும் அடித்தது. விசாகப்பட்டணம் மைதானத்தில் பவுண்டரி லைன் அருகில் இருந்ததும், பந்துகள் அடிக்கடி பறந்துபோய் அங்க‍ே விழுந்துவிட ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.