புதுடெல்லி:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால், ஏர் கண்டிஷன் இயந்திர விற்பனை அதிகரித்துள்ளது.


நாடு முழுவதும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரித்துள்ளது. வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசியை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

எல்ஜி, வோல்ட்டாஸ்,கோத்ரென் மற்றும் லியாட் ஆகிய நிறுவனங்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன.

தேவை அதிகமாக இருப்பதால், சில இடங்களில் ஏசி தட்டுப்பாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக மந்தநிலையில் இருந்த ஏசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு 2019-ம் ஆண்டு வரப்பிரசாதம் என்கின்றனர்.

மார்ச் மாதம் இடைப்பட்ட காலம் வரை ஏசி இயந்திரங்கள் விற்பனை மந்தமாகவே இருந்தது. மார்ச் 15-ம் தேதிக்குப் பின் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. பல இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் எல்ஜி நிறுவனத்தினர்.

அதிக தேவையை சமாளிக்க எல்ஜி நிறுவனம் 8 ஆயிரம் ஊழியர்களின் துணையுடன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
ஏசி வாங்கும் வாடிக்கையாளர்கள் அன்றைய தினமே ஏசியை பொருத்த வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அதனால், ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளோம் என்றும் எல்ஜி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

வோல்டாஸ் நிறுவனத்தினர் கூறும்போது, இந்த ஆண்டு இரு மடங்கு விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதமே நாங்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைத்துவிட்டோம் என்றனர்.

லியாட் நிறுவனத்தினர் கூறும்போது, கோடை காலத்தில் 60% ஏசி விற்பனை இருக்கும். எளிதாக தவணை முறையில் வாங்க முடிவதால், விற்பனை அதிகரித்துள்ளது. 90% பேர் ஸ்பிலிட் ஏசியையே வாங்குகின்றனர்.

மின்சாரத்தை சேமிக்கும் இன்வெர்டர் ஏசியும் குறிப்பிடத்தக்க அளவில் விற்பனையாகிறது என்றனர்.