கொரோனா சிகிச்சை – தன் ஹோட்டல்களை மருத்துவமனைகளாக மாற்ற முன்வந்த ரொனால்டோ!

லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகக் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் தனக்கு சொந்தமான ஹோட்டல்கள் அனைத்தையும் மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனது சக வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், தற்போது போர்ச்சுகலின் மடேய்ரா என்ற இடத்தில் தனிமைப்பட்டு இருந்து வருகிறார் ‍ரொனால்டோ.

உலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக நிதியுதவியை அறிவித்த சில பிரபலங்களின் பட்டியலில் தற்போது ரொனால்டோவும் இணைந்துள்ளார்.

முன்னதாக, ரூடி கோபெர்ட் என்ற என்பிஏ கால்பந்தாட்டக்காரர், தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தவுடன், அக்கிருமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.