ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக்கோரி ஓசூர் நீதிமன்றத்தில் மனு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்களை அவதூறாக பேசியதாக  நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஓசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிலம்பரசன் என்பவர் கடந்த ஜூன் 11ம் தேதி ஓசூர் நகர காவல்நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் அளித்தார். காவல்துறையினர் இதுதொடர்பாக சி.எஸ்.ஆர் வழங்கினர் ஆனால் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை.

இந்த  நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கடந்த ஜூன் 27ம் தேதி ஓசூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்களை அவதூறாக நடிகர் ரஜினிகாந்த் பேசியதாகவும்,  நியாயத்திற்காக  போராடியவர்களை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையின் மேலதிகாரிகளை அணுக அறிவுறுத்தினார்.

இந்நிலையில் மேல் அதிகாரிகளை அணுகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என இன்று மீண்டும் ஓசூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் 2வது முறையாக சிலம்பரசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் மனு மீதான விசாரணையை 11-ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

You may have missed