டில்லி

விமானப் பயணத்துக்கு ஆதார் இணைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய சிவில் விமானத்துறை அமைச்சர் ஜயந்த் சின்ஹா கடந்த வருடம் ஜூன் மாதம் ‘டிஜி யாத்ரா’  என்னும் திட்டம் ஒன்றை அறிவித்தார்.    அதன்படி விமான டிக்கட் வாங்கும் போது ஆதார் எண்ணை அளித்தால் போதும் எனவும் அச்சடிக்கப்பட்ட டிக்கட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் அந்த திட்டத்தில் கூறப்பட்டது.    பயணிகளின் கை ரேகை மற்றும் விழிகளை ஸ்கேன் செய்து எந்த விமானத்தில் அவர்கள் செல்ல வேண்டும்,  எந்த நுழைவாயிலுக்கு செல்ல வேண்டும்  என அவர்கள் மொபைல் போனுக்கு செய்திகள் வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் அச்சடிக்கப்பட்ட டிக்கட்டுகள்,   அடையாள அட்டைகள் ஆகியவை தேவை இல்லை என அரசால் கூறப்பட்டது.     இந்த திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் வரும் ஜூலை மாதம் முதல் சோதனை முறையில்  பெங்களூரு – ஐதராபாத் விமானங்களில் அமுல்படுத்த உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது..

இந்த டிஜி யாத்ரா திட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.    ’மீடியா நாமா’ என்னும் அமைப்பை நிறுவி நடத்தி வரும் நிகில் பாவா என்பவர், “உச்ச நீதிமன்றத்தில் ஆதார் கட்டாயம் ஆக்குவது குறித்து வழக்கு நடந்து வருகிறது.    அத்துடன் ஆதார் விவரங்கள் பல இடங்களில் தவறாக உபயோகப்படுத்தப் படுகின்றன.   இந்நிலையில் விமானப் பயணத்துக்கு ஆதார் இணைப்பு என்பது தேவையற்றது.

அத்துடன் ரேகைப் பதிவு மற்றும் கண் விழி பரிசோதனையில் ஏதும் தவறு நிகழ்ந்தால் பயனிகளல் விமானப் பயணம் மேற்கொள்ள முடியாமல் போக வாய்ப்புள்ளது.    ஒரு சிறு தவறு நடந்தாலும் அந்தப் பயணியால் விமானம் ஏற முடியாது.   அது தவிர இது போல பரிசோதனையால் அதிக நேரம் செலவாக வாய்ப்புள்ளது.   பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும்.

வயதானோர் மற்றும் ரேகை மற்றும் விழிப்பதிவு சரியாக இல்லாதோர் அடையாளம் பற்றி உச்சநீதிமன்றம் இன்னும் முடிவு செய்யவில்லை.   அது தவிர ஒருவரின் பயணம் என்பது அவருடைய சொந்த விஷயம் ஆகும்.   சொந்த விஷயங்களை அறிய அரசுக்கு உரிமை இல்லை என்னும் நீதிமன்ற தீர்ப்பையும் நாம் இந்த சமயத்தில் நினைவில் கொள்ளவேண்டும்”  எனக் கூறி  உள்ளார்.