டில்லி

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சமுதாய இடைவெளியும் ஊரடங்கும் ஆகும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

 

நாடெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி கடந்த 24 ஆம் தேதி அமலாக்கப்பட்ட தேசிய ஊரடங்கு வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்த ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் எனப் பலரும் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர்.   இது குறித்து மத்திய அரசு தன் முடிவை இன்னும் தெரிவிக்கவில்லை.

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று பென்னெட் பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச இணையக் கருத்தரங்கில் கலந்துக் கொண்டார்.  அப்போது அவர், “இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்கள் மூலம் நமது நாடு மற்ற நாடுகளை விடப் பாதுகாப்பான இடத்தில் உள்ளது என உறுதியாகச் சொல்வேன்.

தற்போது கொரோனா பாதிப்பு ஒவ்வொரு 4-5 தினங்களில் இரு மடங்காகி வருகிறது.  பல மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.  அரசு மொத்தம் 133 மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.  கொரோனா பரவுதலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடத்தி வருகிறது.

இதுவரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து ஏதும் கண்டுபிடிக்கவில்லை.  சமுதாய இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் முழு ஊரடங்கு ஆகியவையே தற்போது மிகவும் சக்தி வாய்ந்த தடுப்பு மருந்தாக உள்ளது.  அதையும் மீறிப் பாதிப்பு அடைந்தோரில் 85% பேருக்கு மிகவும் லேசான அளவு பாதிப்பு மட்டுமே இதுவரை அதிகமாகக் காணப்படுகிறது.

கொரோனா சோதனைக்கு மக்கள் எவ்வித அவமானமும் அடையாமல் தைரியமாக முன் வந்து ஒத்துழைக்க வேண்டும்.  அதை விடுத்து எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியரைத் தாக்குவதும் தவறாக நடந்துக் கொள்வதும் தவறாகும். “ என தன் உரையில் தெரிவித்துள்ளார்.