சமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி! ஸ்டாலின்

சென்னை: சமூகநீதி, எப்போதும் வெல்லும் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், வேறுவழியின்றி 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவிப்பதாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையில்,   அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழகஅரசு கொண்டு வந்தது. மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா, கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினமே, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வந்தார். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு, ஆளுநர் விரைவில் முடிவை சொல்ல வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவு வெளியாகி, அகில இந்திய ஒதுக்கீடுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையும் நடைபெற்று முடிவடைந்தது. அடுத்து பொதுப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டிய சூழலில், ஆளுநரின் நடவடிக்கை தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இந்த  இதுதொடர்பாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து பேசினர்.அதைத்தொடர்ந்து திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதினார். ஆனால், ஆளுநர் தரப்பில் மேலும் அவகாசம் தேவை என கோரப்பட்டது.

இதையடுத்து, தமிழகஅரசு அதிரடியாக நேற்று மசோதா அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிட்டது.  இது தமிழக மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகள் இடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், வேறுவழியின்றி, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.30) ஒப்புதல் அளித்தார்.

இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர்  பக்கத்தில், பதிவிட்டிருப்பதாவது,

“மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில், வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

திமுக நடத்திய போராட்டமும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆளுநருக்கு உளப்பூர்வமாக முன்வைத்த வேண்டுகோள்களும், ஆளுநரின் மனமாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. காரணம் என்னவாக இருந்தாலும் இறுதியில் வென்றது சமூகநீதி! எப்போதும் வெல்லும் சமூகநீதி!!” என்று பதிவிட்டுள்ளார்.