டிக்டாக் & இன்ஸ்டாகிராம் – கனடாவின் ‘கிங் மேக்கர்’ ஆனார் ஜக்மீத் சிங்!

கனடா: பூர்வீக இந்தியரான ஜக்மீத் சிங், கனடாவில் நடந்த தேர்தலில் இளைஞர்களைப் பெருமளவில் ஈர்த்து தற்போது அவரது கட்சி ‘கிங் மேக்கர்‘ ஆகும் அளவு வெற்றி பெற்றுள்ளது. இளைஞர்களை ஈர்க்க அவர் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைத் திறம்படக் கையாண்டதே இதற்குக் காரணம்.

கனடாவின் பொதுத் தேர்தல் முடிவில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ வின் சுதந்திரக் கட்சி 157 இடங்களும் எதிர்க்கட்சி 121 இடங்களும் பெற்றுள்ளது. ஜஸ்டினின் சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமானால் அதற்குத் தேவைப்படும் மொத்த எண்ணிக்கையான 170 இடங்களுக்கு 13 குறைவாக இருந்தது.

இந்நிலையில், ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயகக் கட்சி 24 இடங்களை வென்றுள்ளதால், இவர்களின் ஆதரவின்றி சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சி (நியூ டெமக்ரடிக் பார்ட்டி) யின் இந்த வெற்றிக்குக் காரணம், கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருந்த இளைஞர்களிடம் சென்றடைந்ததும், எல்லோரிடமும் தற்போதைய தேவை என்னவோ அதை நிறைவேற்றும் உறுதியுடன் பேசியதுமே என்கிறார், ஜக்மீத் சிங்.

இளைஞர்களை இலக்காக வைத்து மையமான முக்கியக் கருத்துக்களை ராப் இசையுடன் அமைந்த 15 விநாடி காணொளி ஒன்றை டிக்டாக்கில் வெளியிட, அது வைரலாகி மூன்று லட்சம் முறைக்கும் மேலாகக் காணப்பட்டிருக்கிறது. அத்துடன் அவர் இன்ஸ்டாகிராமையும் இதற்காக முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி