கொழும்பு:

கொழும்புவில் நடைபெற்று வந்த தொடர் வன்முறை சம்பவங்களால் முடக்கப்பட்ட சமூக வலைதளங்கள் இன்றுமுதல் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளன.  மேலும், வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஏராளமானோரை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு இலங்கையில் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் உதவியது தெரிய வந்த நிலையில், அங்கு இனக்கலவரம் மூண்டது. சிங்களர்கள், இஸ்லாமியர்கள் வீடுகளுக்குள் புகுந்தும், இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல்களுக்கு காரணம் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தி என்று கூறப்பட்டது. அதையடுத்து சமூக வலைதளங்களை முடக்கி அந்நாட்டு அரசு முடக்கி வைத்திருந்தது. தற்போது வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முடக்கப்பட்டிருந்த சமூக வலைத்தளங்கள் மீண்டும் திரும்பியுள்ளன.

இதைத்தொடர்ந்து, அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை செய்தி தொடர்பாக அத்தியட்சகர் ருவான் குணசேகர, அமைதியை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளிலும் சட்டவிரோத நடவடிக்கை களிலும் ஈடுபட்டவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  தற்போது நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அமைதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்றார்.

மேலும், வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்காக, அதற்காக விசேஷ காவல்துறையினர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர்,  வன்முறையை தூண்டும் வகையிலாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் குறித்து முதலில் கண்டறியப்பட்டால் அவர்கள்மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.