ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 150நாட்களுக்கு பிறகு மீண்டும் 2ஜி இணையதள சேவை தொடங்கப்பட்டு உள்ளது.  இருந்தாலும், வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் முடக்கம் தொடர்ந்து வருகிறது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து  செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ந்தேதி முதல் இணைய தள சேவைகள், சமூக வலைதளங்கள் முடக்கி வைக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள சூழ்நிலையை தொடர்ந்து,  ஸ்ரீநகர் உள்பட ஜம்முவின்  ராம்பன், கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்களில்  இணைய சேவைகள் மீண்டும் தொடங்கியது.

இருந்தாலும் லடாக் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் இணையதள சேவைகள் முடக்கம் தொடர்ந்து வந்தது. இதுதொடர்பாக உச்சநீதி மன்றம் அறிவுறுத்திய நிலையில், தற்போது மீண்டும் பல பகுதிகளில் இணையதள சேவைகள் உயிர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

சுமார், 5 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் முழுவதும் 2ஜி இணையதள சேவை மீண்டும் தொடங்கியது.  மாநிலம் முழுவதும் 20 மாவட்டங்களில் 2 ஜி மொபைல் இணைய சேவைகள் மீட்டமைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  சமூக வலைதளங்களுக்கான தடை தொடரும் என்றும்,  இணைய சேவைகளின் மூலம் 301 வலைத்தளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.