வாட்ஸ் அப் மூலம் வேலை ஆசை காட்டி 600 பெண்களிடம் மோசடி: மென்பொருள் ஊழியர் கைது

சென்னை

ணி ஆசை காட்டி 600 பெண்களிடம் பணம் பறித்து சிலரைப் பலாத்காரம்  செய்துள்ள சென்னையைச் சேர்ந்த மென்பொருள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள திருவொற்றியுர் பகுதியில் வசிக்கும் 33 வயது இளைஞரான ராஜா செழியன் என்னும் பிரதீப் ஒரு மென்பொருள் நிறுவன ஊழியர் ஆவார். இவர்  குவிக்கர்.காம் என்னும் இணையதளம் மூலம் பல  பெண்களின் தொலைபேசி எண்களைச் சேகரித்துள்ளார். அவ்வாறு சேகரித்த எண்களுக்கு வாட்ச் அப் மூலம் பிரபல நட்சத்திர ஓட்டல் வரவேற்பாளர் வேலை காலி உள்ளதாகச் செய்தி அனுப்பி உள்ளார். நாடெங்கும் உள்ள 16 மாநிலங்களில் இருந்து 600 பெண்கள் அவருக்கு விவரம் கேட்டு பதில் அளித்துள்ளனர்.

பிரதீப் அவர்களிடம் அரச்சனா ஜெகதீஷ் என்னும் பெண் பெயரில் தன்னை மனித வள மேம்பாளராகல் அறிமுகம் செய்துக் கொண்டுள்ளார்.  அவர்களிடம் வாட்ஸ் அப் மூலம் பயோடேட்டா மற்றும் புகைப்படங்களைக் கேட்டுள்ளார். ஏராளமான பெண்கள் அவருக்கு புகைப்படம் அனுப்பி உள்ளனர். பெண் பெயரில் சாட் செய்யும் பிரதீப் அந்த பெண்களிடம் ஓட்டல் வரவேற்பாளர் என்பதால் உடல் அழகு முக்கியம் எனக் கூறி அவர்களின் முன்னழகு மற்றும் பின்னழகு படங்களைக் கேட்டுள்ளார்.

பல பெண்கள் இவரையும் பெண் என நம்பி தங்கள் கவர்ச்சிப் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு பிரதீப் அந்தப் பெண்களிடம்  அவர்களின் கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். அவ்வாறு செய்யாமல் இருக்க அவர்களிடம் பணம் மற்றும் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மேலும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்த பல பெண்கள் அவருக்குப் பணம் கொடுத்துள்ளனர். ஒரு சிலர் அவருடன் வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இவர் இதுவரை 600க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் பறித்துள்ளார். ஒரு சில பெண்களைப் பலாத்காரம் செய்துள்ளார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் இவரிடம்  ஏமாந்த விவகாரத்தைத் தைரியமாகத் தெலுங்கானா மாநில மியாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதையொட்டி காவல்துறையினர் விசாரணை செய்து சென்னையில் ஒளிந்திருந்த பிரதீப்பை நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சிக்கி உள்ளன. பிரதீப் திருமணமானவர். இவருக்கு மனைவியும் ஒரு வயது மகனும் உள்ளனர். இவர் மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.