யாழ்ப்பாணம்,

தென்மேற்கு பருவமழை காரணமாக  இலங்கையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின்  களுத்துறை, புளத்சிங்கள பகுதிகளில்  பெய்துவரும் கன மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக வும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினரும், விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக பல வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

தற்போது பெய்துவரும் கனமழை வரும் ஜூன் 5ந்தேதி வரை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து,   ரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் பல மாவட்டங்களில் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் மழையுடன் கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்குமென்றும்,  பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,  தென்மேற்கு மாகாணங்களைத் தவிர்த்து நாட்டின் ஊவா,கிழக்கு ஆகிய மாகாணங்களிலும்  மழைபெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வானிமை மையம் கூறியுள்ளது.

மேலும், கடல் பிரதேசம் மிகவும் கொந்தளிப்புடன் இருக்குமென்றும்  காற்றின் வேகம் மணிக்கு  60 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ  மீட்டர் வேகத்தில் வீசுமென்றும் வானிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.