அமைச்சரை சுட்டு கொன்ற பாதுகாப்பு வீரர்கள்

மொகடிசு:

சோமாலியாவில் தீவிரவாதிகள் மற்றும் போராளிகள் அடிக்கடி அரசுக்கு எதிராக தற்கொலை படை தாக்குதலில் ஈடுப்பட்டு வருகின்றனர். தலைநகரான மொகடிசு நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சரான அப்துலாஹி ஷேக் அபாஸ் (வயது 31) என்பவர் ஜனாதிபதியை சந்திக்க மாளிகைக்கு காரில் சென்றார்.

அப்போது, மாளிகைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் காரில் வருவது தற்கொலை படை தீவிரவாதிகள் என தவறுதலாக நினைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
இச்சம்பவத்தில் காருக்குள் இருந்த அமைச்சர் குண்டடிபட்டு பரிதாபமாக இறந்தார். பின்னர் தான் அவர் அமைச்சர் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் அப்துலாஹி ஷேக் அபாஸ் வெற்றி பெற்று இளம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.