புதுடெல்லி: உலகளவில் சுமார் 50 நாடுகள் வரை, தமது மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. இவற்றில், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவைப் பொறுத்தவரை, முறையான அனுமதிக்கு காத்திராமலேயே, மக்கள்தொகையில் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புடையோரை தேர்வுசெய்து தடுப்பு மருந்து வழங்கும் பணியைத் துவக்கிவிட்டது.

தற்போதைய நிலைவரை, சுமார் 50 லட்சம் சீனர்கள் வரை தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவைப் பொறுத்தவரை, அந்நாடு தனது ஸ்புட்னிக் V என்ற தடுப்பு மருந்து வழங்கும் பணியை, டிசம்பர் 5ம் தேதி முதலே துவங்கிவிட்டது. இந்த மருந்தை, பெலாரஸ் மற்றும் அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இந்த மருந்தை அல்ஜீரியாவும் அங்கீகரிக்கவுள்ளது.

பிரிட்டனைப் பொறுத்தவரை, ஆஸ்ட்ராஸெனகா – ஆக்ஸ்போர்டு இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தை, வரும் ஜனவரி 4ம் தேதி முதல் பயன்படுத்தவுள்ளது.