வரலாற்றில் சில திருத்தங்கள் –  மேற்கில் தோன்றிய சிசேரியன் சிகிச்சைமுறை.

அத்தியாயம்: 11                                    இரா.மன்னர்மன்னன்

.

இன்றைய நவீன உலகில் அல்லது நவீனமாகிவிட்டதாக நாம் நம்பும் இன்றைய உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்களுள் ஒன்று மருத்துவத் துறையின் மாபெரும் வளர்ச்சி. ஒரு மனிதன் தனது உயிரின் மீது வைத்துள்ள பயத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு துறை எந்த அளவுக்கு வளரலாம் என்பதற்கு உதாரணமாக இந்த வளர்ச்சியை நாம் பார்க்கலாம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்புவரை உலகெங்கும் மருத்துவம் என்பது ஒரு துணைத் தொழிலாகவும் சேவையுமாகவே இருந்தது. மருத்துவம் அறிந்தவர்கள் அன்றைக்குத் தங்கள் ஆய்வுகளுக்குப் போதிய பணம்கூட இல்லாமல் தவித்தனர். இன்றைக்கு மருத்துவத்துறையை விடவும் பல மடங்குகளுக்கு மருத்துவமனை உரிமையாளர்களும் மருத்துவர்களும் வளர்ந்துவிட்டனர்.

அவர்களின் தேவைக்கு ஏற்ப நாமும் நமது உணவு வழக்கங்களையும் அன்றாடப் பழக்கங்களையும் மாற்றி விரைவில் நோயாளிகளாகின்றோம். 40 வயதுவரை வேகமாக சம்பாதித்து பின்னர் அதில் பெரும்பான்மைத் தொகையை மருத்துவத்திற்கு செலவிடுவது இன்றைக்கு ஒரு உலகளாவிய வாழ்க்கை முறையாக உருவெடுத்துவிட்டது.

பிழைக்க வைக்கின்றது என்ற அடிப்படையில் கொண்டாட வேண்டியதாகவும், வாழ விடுவ தில்லை என்ற அடிப்படையில் தூற்ற வேண்டியதாகவும் நவீன மருத்துவம் உள்ளது. அதன் மாபெரும் வரமாகவும் அவலமாகவும் காணப்படுவது சிசேரியன் எனப்படும் மகப்பேறு அறுவை சிகிச்சை. அமெரிக்க அதிபர்களில் ஜிம்மி கார்டருக்கு முன்னே யாரும் மருத்துவமனையில் பிறந்தவர்கள் இல்லை. இன்றைக்கு உலகெங்கும் பெரும்பான்மைக் குழந்தைப் பிறப்புகள் மருத்துவமனைகளில்தான் நிகழ்கின்றன.

தனியாரிடம் மருத்துவம் தாரைவார்க்கப்பட்ட நமது நாட்டில், தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் மகப்பேறுகள் பெரும்பாலும் சிசேரியன்களாக உள்ளன. ஒரு கவிதையை எதேர்ச்சையாகக் கேட்டேன்.

செத்த தோலைத் தைக்கும்

செறுப்புத் தைக்கும் தொழிலாளியின்ஊசியில் உள்ள நேர்மை கூட

உயிரோடு உள்ள மனிதத் தோலைத் தைக்கும்

மருத்துவர்களின் ஊசிகளுக்கு

பலசமயங்களில் இருப்பதில்லை.

கல்லுக்கு கர்ப்பம் என்றால் கூட

சிசேரியன்தான் செய்கிறார்கள்!.

– இந்தக் கவிதை உண்மைக்கு நெருக்கமாகவே உள்ளது.

ஏனெனில் 2016ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் அதிகம் சிசேரியன் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இப்போது உள்ளது.

சுகப்பிரசவத்தை விடவும் சிசேரியனுக்கு அதிகம் பணம் வசூலிக்கலாம் என்ற ஒற்றைக் காரணத்தால், ஒரு தாயின் வயிற்றைக் கிழிக்கும் கொடிய பாவத்தை பல மருத்துவர்கள் செய்கிறார்கள். முதல்முறை சிசேரியன் நடந்தால் பிறகு அடுத்து சுகப்பிரசவம் ஆகும் வாய்ப்பு பத்து சதவிகிதத்திற்கும் குறைவு என்பதால் சிசேரியன் தொடர்கதையாகின்றது. அதே சமயம் சிசேரியனை பெண்களின் உடல்நலப் பாதுகாப்பிற்கு என்று மட்டும் பயன்படுத்தும் நல்ல மருத்துவர்களும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

இவர்களின் முதல் உதாரணம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் பேரி என்ற ராணுவ மருத்துவர். 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரே நவீன உலகின் முதல் சிசேரியனை வெற்றிகரமாக செய்தவர். அவரது வழிகாட்டுதல்கள் இன்றும் சிசேரியன்களில் பயன்படுகின்றன. தனது 66வது அல்லது 76ஆவது வயதில் அவர் இறந்த பின்னர் அவர் ஒரு ஆண் அல்ல பெண் என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பெண்கள் மருத்துவம் படிக்க பல்கலைக் கழகங்கள் தடை செய்திருந்ததால், ஆண் வேடமிட்டு படிக்கத் துவங்கிய பேரி, மகளிர் நல மருத்துவத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் ஆணாகவே வாழ்ந்திருக்கிறார்!.

மருத்துவத்தில் வணிகப்பார்வை தோன்றுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் சிசேரியன்கள் செய்யப்பட்டு உள்ளன. நம் தலைப்பில் உள்ள உலகின் முதல் சிசேரியன் குழந்தை யார்?

அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மருத்துவமனைகளிலும், இந்திய மருத்துவமனைகளிலும் மகப்பேறு அறுவை சிகிச்சையை எண்ணி பயப்படும் கருவுற்ற பெண்களிடம் சொல்லப்படும் ஒரு தகவல் ‘பயப்படாதீங்க, 2000 வருஷத்துக்கு முன்னாடி ஜூலியஸ் சீசரே அறுவை சிகிச்சையிலதான் பொறந்தாரு. அதனாலதான் அவருக்கு சீசர்ன்னு பேரு’. சீசர்தான் சிசேரியனில் பிறந்த முதல் குழந்தையா? முதலில் சீசர் ஒரு சிசேரியன் பிறப்பா?.

ஜீலியஸ் சீசர்தான் சிசேரியனில் பிறந்த முதல் குழந்தை என்ற கருத்தின் வேர் வரலாற்று ஆசிரியர் மூத்த பிளினியின் ஒரு குறிப்பால் உண்டாகின்றது. அவர்தான் சீசருக்கு சிசேரியன் என்ற மகப்பெறு அறுவை சிகிச்சையால் அந்தப் பெயர் வந்தது என்ற கருத்தை முன்வைத்தார். ஆனால் அவர் சீசர்தான் சிசேரியனின் மூலம் பிறந்த முதல் குழந்தை என்று கூறவில்லை. சீசருக்கு முன்பு சிசேரியனின் பிறந்த எந்த அரசரையும் அறியாத உலகம் ‘சீசரே முதல் சிசேரியன் குழந்தை’ என்று ஏற்றுக் கொண்டது. ஆனால் இதை நாம் ஏற்பதில் ஒரு சிக்கல் உள்ளது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு இருந்த ரோமானிய மருத்துவமுறைகளின்படி தாயைக் காப்பாற்ற முடியாத சூழலில் அல்லது தாய் இறந்துவிட்ட சூழலில் மட்டுமே குழந்தையைக் காக்க சிசேரியன் செய்யப்பட்டது. பெண்ணின் உடலைக் குழந்தையோடு புதைக்கக் கூடாது என்பதுதான் முதன்மைக் காரணம். இந்த வழக்கம் கிரேக்கர்களிடம் இருந்து ரோமானியர்களுக்கு வந்திருக்கலாம். ஏனெனில் கிரேக்க புராணங்களில் சூரியக் கடவுளான அப்பல்லோ, இறக்கும் நிலையில் இருந்த தன் மனைவியின் வயிற்றில் இருந்து தன் மகன் ஆஸ்க்லெபியஸ்ஸை பிளந்து எடுத்ததாகக் கதை ஒன்று உள்ளது. கி.மு. 700ல் ரோமானிய அரசர் நூமா பொம்பிலியஸ் ‘சாகும் நிலையில் உள்ள கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தை பிரித்தெடுக்கப்பட வேண்டும்’ என்றார். இதுதான் உலக வரலாற்றில் சிசேரியன் குறித்த முதல் குறிப்பு.

கிரேக்கர் மற்றும் ரோமானியர்களுக்கு மாற்றாக பாபிலோனில் இருந்த யூதர்கள் ‘குழந்தையின் உயிரை விடவும் தாயின் உயிரே முக்கியம்’ என்ற கருத்தை உடையவர்களாக இருந்தனர். தாயின் விலாப்பகுதியில் வெட்டை ஏற்படுத்தி, சாம் என்ற மருந்துக் கலவை மூலம் சதையைப் பிளந்து குழந்தையை இவர்கள் வெளியே எடுத்தார்கள். மகப்பேறு முடிந்த பின்னர் துணியால் காயத்தில் கட்டு போடப்பட்டது!. இந்த முறையில் குழந்தைகள் பிழைத்தனவா என்று தெரியவில்லை. பெரும்பாலான பண்டைய சிசேரியன்களில் தாய் அல்லது குழந்தை யாராவது ஒருவரே பிழைத்து உள்ளனர். ரோமாக இருந்தால் குழந்தை பிழைக்கும் பாபிலோனாக இருந்தால் தாய் பிழைப்பார். 19ஆம் நூற்றாண்டு வரையில் கூட சிசேரியனில் தாயா பிள்ளையா என்ற கேள்வியே முன்னின்றது. 1930களில் கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் போப் பதினொன்றாம் பியஸ் ‘சிசேரியனில் குழந்தைகளைப் பலியிடக் கூடாது’ என்று கருத்து சொன்னார்.

கிறிஸ்தவர்கள் போற்றும் பழைய ஏற்பாட்டின் 166வது பாடல் பிரசவ வேதனையில் உள்ள பெண்களுக்கான ஜெபத்திற்காக அருளப்பட்டது. அதன் வரிகள்

’மரணத்தின் வலை என்னைச் சுற்றிப் பின்னிக் கொண்டிருக்கின்றது.

நரகத்தின் வேதனை என்னை ஆட்கொண்டு வருகிறது. ஆண்டவரே….

என் ஆத்மாவுக்கு விடுதலை அளியுங்கள் என்று உங்களை நான்   வேண்டுகிறேன்’

-இதிலிருந்து பிரசவ வேதனையின் தீர்வு தாயின் மரணமே என்ற பண்டைய எண்ணம் புலனாகின்றது.

ஆனால் ஜீலியஸ் சீசர் பிறந்த பிறகும்கூட அவரதுதாய் ஆரேலியா (Aurelia) உயிரோடு இருந்தார், அவர் குறிப்பிட்ட வயது வரையில் சீசரை வளர்த்தார் என்று ரோமானிய வரலாறு கூறுகின்றது. இதனால் சீசர் சிசேரியனால் பிறந்த குழந்தையே அல்ல என்பது உறுதியாகின்றது. ஐரோப்பிய வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் இதனையே கூறி உள்ளனர். சீசருக்கும் சிசேரியன் என்ற வார்த்தைக்கும் இடையே ஒரே ஒரு தொடர்புதான் உண்டு. சீசருக்கும் கிளியோபாட்ராவுக்கும் பிறந்த குழந்தையின் பெயர் சிசேரியன் என்பதுதான் அது.

இப்போது அடுத்த கேள்வி, சிசேரியன் முறையில் பிறந்த முதல் பிரபலமான குழந்தை யார்? இந்த பதிலை அறிய நாம் ரோமாபுரியில் இருந்து ஆசிய கண்டத்துக்கு மீண்டும் பயணித்து வர வேண்டும்.

இந்தியாவின் அண்டை நாடான சீனாவின் வரலாற்றில் மிக முக்கியமான வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவராகப் போற்றப்படும் லூசாங்(Luzhong)கின் ஒரு குறிப்பு,  மஞ்சள் பேரரசனின் ஆறாவது தலைமுறையாக வந்த சீன அரசன் ஒருவனுக்கு 6 மகன்கள் இருந்ததாகவும் அவர்கள் அனைவருமே ‘உடலை வெட்டி வெளியில் எடுக்கப்பட்டவர்கள்’ என்றும் கூறுகின்றது. அப்படியானால் அந்த அரசருக்கு 6 மனைவிகள் இருந்திருக்க வேண்டும். அவரது காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. இதற்கு சான்று கூறும் விதமாக பெண்களின் உடலை வெட்டி குழந்தைகள் வெளியே எடுக்கப்படும் காட்சிகள் பல சீன ஓவியங்களில் காணப்படுகின்றன.

சீனாவிற்கு முன்பாகவே நமது இந்தியாவிலும் சிசேரியன் குழந்தைப் பிறப்புகள் நடந்துள்ளன. அதற்கான முக்கிய ஆதாரம் மவுரிய அரசர்களின் வரலாற்றில் உள்ளது. மவுரியப் பேரரசின் முதல் அரசர் சந்திரகுப்த மவுரியர். இவரது அரசியல் ஆலோசகரே சாணக்கியர் என்று அறியப்படும் கவுடில்யர். சந்திரகுப்தர் தனது காலத்தில் பேரரசராகவும் மாவீரராகவும் அறியப்பட்ட ஒருவர். மாவீரன் அலெக்சாண்டரின் வழியில், அவருக்குப் பின் அரசராகப் பதவியேற்ற அவரது படைத்தளபதி செலுக்கஸ்ஸை இவர் போரில் வென்றார். இந்த வெற்றி இவரை ஐரோப்பா முழுமையிலும் பிரபலப்படுத்தியது. இவர் செலுக்கஸ்ஸின் மகள் ஹெலனை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவரது மூத்த மனைவியின் பெயர் துர்தரா.

மவுரியப் பேரரசு எப்போதும் எதிரிகளால் சூழப்பட்ட ஒன்று. இதனால் சந்திரகுப்தரின் உணவில் யாராவது விஷம் கலந்துவிடலாம் என்ற அபாயம் எப்போதுமே இருந்தது. ஒருவேளை விஷத்தை சந்திரகுப்தர் உண்டே விட்டாலும் அவருக்கு ஒன்றும் ஆகக் கூடாது என்று சாணக்கியர் எண்ணினார். இதனால் நெடுங்காலமாக விஷத்தை உணவில் கலந்து சந்திரகுப்தரை அதற்கு அவர் பழக்கினார். முதலில் உணவுடன் மிகக் குறைவாகக் கலக்கப்பட்ட விஷத்தின் அளவு பின்னர் அதிகரித்துக் கொண்டே வந்து ஒரு சராசரி மனிதனைக் கொல்லும் அளவில் வந்து நின்றது. இதனால் எந்த பாதிப்பும் சந்திரகுப்தருக்கு ஏற்படவில்லை. இது அரண்மனையில் வேறு யாருக்கும் தெரியாது.

(இது போன்ற விஷத்தை விஷத்தால் முறிக்கும் வழக்கம் தமிழகத்திலும் முற்காலத்தில் இருந்துள்ளது. பாம்பு கடிக்க வாய்ப்புள்ள பகுதிகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் உடலையே விஷமாக்கித் தங்களைப் பாதுகாத்துக் கொண்ட பல மருத்துவக் குறிப்புகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.)

இந்நிலையில் சந்திரகுப்தருக்கு வைக்கப்பட்டிருந்த உணவை ஒருநாள் அவரது முதல் மனைவி துர்தரா எடுத்து உண்டு விடுகிறார். அப்போது அவர் நிறைமாதம் கர்ப்பமாக வேறு இருக்கிறார். துந்தாரா விஷம் கலந்த உணவை உண்டதை அறிந்த சாணக்கியர் துர்தராவின் வயிற்றில் உள்ள குழந்தையை மட்டுமாவது காப்பாற்ற எண்ணுகிறார். அவரது வழிகாட்டுதலால் அறுவை முறையில் குழந்தை வெளியே எடுக்கப்படுகின்றது. தாய் பிழைக்கவில்லை. இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர் இந்தியாவின் புகழ்மிக்க ஆயுர்வேத மருத்துவரான சுஸ்ருதர்.

ஆனாலும் குழந்தையை வெளியே எடுப்பதற்குள்ளாகவே விஷத்தின் தாக்கம் துர்தராவின் கருப்பைக்குள் சென்றுவிட்டது. இதனால் வெளியே எடுக்கப்பட்ட குழந்தையின் தலையில் நீலம் கட்டி ஒரு பொட்டைப்போல இருந்தது. அதனால் அந்தக் குழந்தைக்கு ‘பிந்துசாரர்’ (பிந்து – பொட்டு) என்று பெயர் வைக்கப்பட்டது. இவ்வாறாக பிந்துசாரர் பிறந்த ஆண்டு கி.மு.320. பிந்துசாரரின் மகனே பேரரசன் அசோகர்.

அறுவை சிகிச்சை குறித்து சாணக்கியர் விரைந்து ஒரு முடிவை எடுத்திருக்கின்றார் என்றால் அவருக்கு முன்பாகவே பலர் இந்த முறையை இந்தியாவில் முயன்று உள்ளனர் என்றே நாம் கொள்ள முடிகின்றது.

இதனால் பிந்துசாரரும் முதல் சிசேரியன் குழந்தை அல்ல. ஆனால் அவர் சீசருக்குக் காலத்தால் மூத்தவர். மேலும் பிந்துசாரரின் பிறப்பை நேரில் கண்ட அவரது சிற்றன்னை ஹெலன் மூலமாகவே மகப்பேறு அறுவை சிகிச்சை ரோமானியர்களுக்கு அறிமுகமானது என்றும் இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். அதற்கு வாய்ப்புகளும் உள்ளன. இப்போது நாம் நமது ஆங்கில மருத்துவர்களுக்கு கூறலாம் ‘சிசேரியனில் பிறந்த முதல் குழந்தை சீசர் அல்ல, அவருக்கு முன்பே எங்கள் பிந்துசாரர் சிசேரியனில்தான் பிறந்தார்’ என்று.

ஆனால் சிசேரியன் கடைசியான தீர்வாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் வரலாறு நமக்கும் மனிதாபிமானமுள்ள மருத்துவர்களுக்கும் சொல்வது.

மகனை சிசேரியன் மூலம் வெளியே எடுக்கும் அப்பல்லோ

மருத்துவர் ஜேம்ஸ் பேரி