ஸ்டெர்லைட் போராட்டத்தில் சில குழுவினர் வன்முறையை தூண்ட முயற்சி: தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஒருசில குழுவினர் வன்முறையை தூண்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்… எனவே கவனம் தேவை என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரி எச்சரித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.

ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரியிடம் மனு கொடுத்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்த அறிவித்து வருவதால், தூத்துக்குடி பகுதியில் மீண்டும் கொந்தளிப்பான சூழலும், பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் அலவலகத்தில்,  பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் குழு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு குழு வினர் சார்பாக  பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் உதவி ஆட்சியர் அனு, மற்றும் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக ஏற்பட்டு வரும்  சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலை குறித்த இங்குள்ள  மக்களின் முடிவுதான் அரசின் முடிவாகும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தேசிய பசுமை தீர்ப்பாய தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய விரைவான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேல் முறையீட்டில் நமது வாதங்கள் அனைத்து விவரங்களையும் நுணுக்கமாக எடுத்து வைத்து ஆலை தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்புகளை முழுமையான விவரங்களுடன் மேல் முறையீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துள்ள முடிவு அரசின் கொள்கை முடிவுதான். சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்கதான் இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களில்  ஒருசில குழுக்கள் வன்முறையை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலமும் வன்முறையை தூண்டிட பல்வேறு குழுக்களும் ஈடுபட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கவே இக்கூட்டம் நடத்தப்படு கிறது. தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் உங்களின் நிலைப்பாட்டில்தான் உறுதியாக உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் இதில் உறுதியாக உள்ளார்கள். எனவே, இயல்பு நிலை தொடர்ந்திடும் வகையிலான மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை களுக்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You may have missed